ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

உண்மையை உள்ளபடி அறிய அல்லாஹ் துணை செய்வானாக !





சுலைமான் (அலை) நிராகரிப்பவராக இருக்கவில்லை.

நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த யூத குருமார்கள் சூனியத்தின் மூலமும் பிற தவறான வழிகளிலும் பொருளீட்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இந்த சூனியத்தை நியாயப்படுத்த இரண்டு பொய்யான வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

 'இந்தக் கலை தங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டதன்று; மாறாக, சுலைமான் நபி அவர்கள் வழியாகவே எங்களை வந்தடைந்துள்ளது. எனவே இந்தக் கலையில் ஈடுபடுவதும் இதன் மூலம் பொருளீட்டுவதும் தவறானதல்ல' என்பது அவர்களின் முதல் வாதம்.

 'இந்தக் கலையை ஜிப்ரீல் மிக்காயீல் ஆகிய வானவர்கள் தாம் சுலைமான் நபியிடம் கொண்டு வந்தனர் என்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெற்ற செயல் தான்' என்பது அவர்களின் மற்றொரு வாதம்.

பொய்யான இந்த இரண்டு வாதங்களும் இந்த வசனத்தில் மறுக்கப்படுகின்றன. எப்படி என்பதைப் பார்ப்போம்.

 'வத்தபவூ மாதத்லுஷ்ஷயாதீனு அலாமுல்கி சலைமான்' சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்த (சூனிய)தையே இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

வமா கபர சுலைமானு' சுலைமான் நிராகரிப்பவராக இருந்ததில்லை.

 'வலாகின்னஷ்ஷயாதீன கபரூ யுஅல்லிமூனன் னாஸஸ்ஸிஹ்ர' இந்த சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்களாக இருந்தனர்.

இந்த மூன்று வாக்கியங்களிலும் ஆழமாக சிந்தனையைச் செலுத்தும் போது ஸிஹ்ர் என்ற கலையைப் போதிப்பது இறை மறுப்பாகும். இது போன்ற இறை மறுப்பை ஸுலைமான் நபி செய்ய மாட்டார். ஷைத்தான்கள் தாம் இதைச் செய்தனர்' என்ற உண்மை தெரிகின்றது. சூனியத்துக்கும் சுலைமான் நபிக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

இந்த மூன்று வாக்கியங்களுக்கும் பொருள் கொள்வதில் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. கருத்து வேறுபாட்டுக்கு இடமுமில்லை.

 'வமா உன்ஸில அலல்மலகைனி பிபாபில' இந்த வாக்கியத்திற்கு பொருள் கொள்வதில் தான் வேறுபாடு தோன்றுகிறது.

 'வமா உன்ஸில' என்பதில் மா' என்ற சொல் இடம் பெறுகின்றது. அரபு இலக்கணத்தில் இது இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

 'இல்லை' என்பது இதன் முதலாவது அர்த்தம்.

 'மா' என்ற சொல்லுடன் வரும் வினைச்சொல் தொழிற்பெயராக மாறுதலடையும் என்பது மற்றொரு அர்த்தம். இதை விபரமாகப் புரிந்து கொள்ள சில உதாரணங்கள் காண்போம்.

கரஅ என்றால் ஓதினான் என்பது பொருள். இதன் துவக்கத்தில் மா' என்ற சொல் இணைந்து மாகரஅ' என்று ஆகும் போது ஓதவில்லை' என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஓதுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஓதினான் என்பதுடன் மா' சேர்ந்ததால் வினைச்சொல் என்ற நிலைமாறி ஓதுதல் எனும தொழிற்பெயராக ஆகின்றது. மா' வுக்கு இல்லை' என்று பொருள் கொண்டால் ஓதினான்' என்பது ஓதவில்லை' என்று ஆகும்.

இரண்டு விதமாகவும் மா' எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு மேற்கண்ட வசனத்தின் முற்பகுதியையே மற்றொரு உதாரணமாகக் கொள்ளலாம்.

மா தத்லுஷ்ஷயாதீனு

மா கபர சுலைமானு

ஆகிய இரு இடங்களில் மா இடம் பெறுகின்றது.

தத்லு என்றால் ஓதுவார்கள் என்பது பொருள்.

மாதத்லூ என்றால் ஓதியவை என்று ஆகின்றது.

இந்த இடத்தில் மா' என்பது பின்வரும் வினைச் சொல்லை தொழிற் பெயராக மாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கஃபர' என்றால் நிராகரித்தார் என்பது பொருள்.

மா கஃபர' என்று கூறும் போது நிராகரிக்கவில்லை என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

இங்கே உடன்பாட்டு வினை; எதிர்மறை வினையாக மாறுகின்றது. மேற்கண்ட ஒரு வசனத்திலேயே மா' என்பது இரண்டு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் 'வமா உன்ஸில அலல் மலகைனி' என்பதற்கு

 'அந்த இரண்டு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்பட்டிருக்கவில்லை' என்றும் பொருள் கொள்ளலாம்.

 'இரண்டு வானவர்களுக்கு அருளப்பட்டதையும் (அவர்கள் பின்பற்றினார்கள்) என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த இரண்டாவது அர்த்தத்தையே பெரும்பாலான விரிவுரையாளர்கள் செய்திருந்தாலும் இதற்குச் சான்றாக பொய்யான கதை ஒன்றைப் புனைந்திருந்தாலும் நாம் முன்னர் சொன்ன காரணங்களால் இந்த அர்த்தம் பொருத்தமற்றதாகின்றது.

மற்றொரு காரணத்தினாலும் இந்த அர்த்தம் பொருந்தாமல் போகின்றது. ஷைத்தான்கள் இந்த சூன்யத்தைக் கற்றுக் கொடுத்ததாக இவ்வசனத்தின் முற்பகுதி காணப்படுகின்றது.

ஷைத்தான்கள் இதைக் கற்றுக் கொடுத்திருக்கும் போது, ஷைத்தான்களிடமிருந்து அவர்கள் அதைக் கற்றிருக்கும் போது அவர்களுக்கு முன்பே தெரிந்த ஒரு கலையை மலக்குகள் வந்த கற்றுக் கொடுத்தார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தவில்லை. இந்தக் காரணத்தினாலும் இந்த இரண்டாவது அர்த்தம் பொருந்தி வரவில்லை.

 'அந்த இரண்டு மலக்குகள் மீது இந்தக் கலை அருளப் படவில்லை' என்று பொருள் கொள்ளும் போது யூதர்கள் இதற்கு மார்க்க அங்கீகாரம் அளிக்க முயன்றது முறியடிக்கப் படுகின்றது. மலக்குகளின் கண்ணியம் காக்கப்படுகின்றது. முன்னுள்ள வாசகத்துடனும் இது ஒத்துப் போகின்றது.

வமாகஃபர சுலைமானு - சுலைமான் நிராகரிப்பவராக இருக்கவில்லை

வமா அன்ஸில அலல் மல கைனி - அந்த இரண்டு மலக்குகள் மீதும் அது அருளப்படவில்லை என்று அடுத்தடுத்து வருவது பொருத்தமாகவும் இருக்கிறது.

இரண்டு வானவர்கள் என்று இங்கே இறைவன் குறிப்பிடுவது யாரை? இது அடுத்தபடியாக நாம் அலச வேண்டிய விசயமாகும்.

இங்கே அலா மலகைனி' என்று இறைவன் குறிப்பிடாமல் அலல் மலகைனி' என்று குறிப்பிடுகின்றான்.

மலகைனி என்பதற்கும் அல் மலகைனி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

மலகைனி என்றால் இரு வானவர்கள் என்று பொருள்.

அல்மலகைனி என்றால் அந்த இரு வானவர்கள் என்று பொருள்.

இறைவன் அல்மலகைனி என்று குறிப்பிடுவதால் முன்பு கூறப்பட்ட இரண்டு வானவர்களையே இங்கே குறிப்பிடுகிறான்.

இந்த வசனத்திற்கு முன்னால் இரண்டு வானவர்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா? என்று ஆராயும் அவசியம் நமக்கு ஏற்படுகின்றது.

இந்த வசனத்திற்கு ஐந்து வசனங்களுக்கு முன்னால் இரண்டு வானவர்கள் பற்றிக் குறிப்பிடுவதை நாம் காண முடிகிறது.

அல்லாஹ்வுக்கும், வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

 (அல்குர்ஆன் 2:98)

இந்த வசனத்தில் பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு மலக்குகள் பற்றி பேசப்படுகின்றது. அந்த இரண்டு மலக்குகளையே இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான் என்பதே சரியானதாகும்.

இது வரை நாம் ஆராய்ந்த வாசகங்கள் வரையிலான பொருள்களைக் காண்போம்.

வத்தபவூ மாதத்தலுஷ் ஷயாதீனு அலாமுல்கி சுலைமான - சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் போதித்ததை அவர்கள் (யூதர்கள்) பின்பற்றினார்கள்.

வமா கஃபர சுலைமானு - சுலைமான் நிராகரிப்பவராக இருக்கவில்லை.

வலாகின்னஷ் ஷயாதீன கஃபரூ யுஅல்லிமூனன் னாஸஸ் ஸிஸ்ர - மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்து ஷைத்தான்கள் தாம் காஃபிர்களாக ஆனார்கள்.

வமா உன்ஸில அலல் மலகைனி பிபாபில - பாபிலோனில் (ஜிப்ரீல் மீகாயில்) ஆகிய அந்த இரு வானவர்கள் மீதும் அந்தக் கலை அருளப்படவில்லை.

இப்படிப் பொருள் கொள்ளும் போது, சூனியக் கலைக்கும் சுலைமான் நபிக்கும் சம்பந்தமில்லாதது போல், ஜிப்ரீல், மீகாயீல் போன்ற வானவர்களுக்கும் சூனியக் கலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெளிவுபடுத்தப்படுகின்றது.

அரபு இலக்கண அடிப்படையில் இவ்வாறு பொருள் கொள்ள இடமிருப்பதாலும் இவ்வாறு பொருள் கொள்ளும் போது வானவர்கள் கண்ணியம் காக்கப்படுவதாலும்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மா உன்ஸில' என்பதற்கு லம்யுன்ஸிலில்லாஹு' (அல்லாஹ் இறக்கியருளவில்லை) என்று விளக்கமளித்திருப்பதாலும்

இவ்வாறு பொருள் கொள்வதே சரியானதாகத் தோன்றுகிறது.

ஹாரூத் மாரூத்

 2:102 வசனம் சூனியத்தின் மூலம் பெரிதாக ஒன்றையும் செய்ய முடியாது என்பதை அறிந்தோம். இவ்வசனத்தை எடுத்துக் காட்டி விட்டதால் அதில் கூறப்படும் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பதையும் இது பற்றி விரிவுரையாளர்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாட்டையும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.

பில்லி சூனியத்துடன் அந்த விளக்கம் தொடர்புடையது அல்ல என்றாலும் இவ்வசனம் பற்றி சரியான அறிவைப் பெறுவதற்காக இதை விளக்குகிறோம்.

அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன. அதையும் விபரமாக நாம் பார்த்து விடுவோம்.

வத்தபவூ மாதத்லுஷ் ஷயாதீனு' - ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.

ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றதா?

இதை முதலில் நாம் விளங்க வேண்டும்.

ஷைத்தான்' என்ற பதப்பிரயோகம் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்துவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. அரபியரின் வழக்கத்தில் மட்டுமின்றி, திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூட இது போன்ற பிரயோகங்களை நாம் காணலாம்.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது 'நம்பிக்கை கொண்டுள்ளோம்' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது 'நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே' எனக் கூறுகின்றனர்.

 (அல்குர்ஆன் 2:14)

இந்த இடத்தில் ஷைத்தான் என்று கூறப்படுவது அவர்களின் தலைவர்களையே என்பதில் ஐயமில்லை.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

 (அல்குர்ஆன் 6:112)

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

 (அல்குர்ஆன் 114:5, 6)

இந்த வசனங்களிலிருந்து மனிதர்களில் மோசமானவர்களையும் ஷைத்தான்கள் என்று கூறப்படுவதுண்டு என்பதை அறிய முடிகின்றது.

தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும் (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597)

கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்ம் 4193)

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் 'ஹாரூத் மாரூத்' என்கிறான்.

அதாவது இவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள் ஹாரூத் மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம் காட்டுகிறான்.

அரபு மொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை பத்ல்' என்று அரபு இலக்கணம் கூறும். ஷைத்தான்கள் என்பதன் விளத்ககமே ஹாரூத், மாரூத் என்பது.

யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது சுலைமான் நபியுமன்று. மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற (மனித) ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.

தப்ஸீர் கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் 'இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

குர்துபி அவர்கள் குறிப்பிட்ட இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.

இந்த இடத்தில் அரபு இலக்கண ரீதியாக எழுகின்ற ஒரு ஐயத்தையும் நாம் அகற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அரபு மொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று வகைகள் உள்ளன. இந்த இருமை பெரும்பாலான மொழிகளில் கிடையாது. ஒரு வார்த்தைக்கு விளக்கமாக வரும் மற்றொரு வார்த்தை ஒருமைக்கு ஒருமையாகவும், இருமைக்கு இருமையாகவும், பன்மைக்கு பன்மையாகவும் அமைய வேண்டும்.

இங்கே ஷைத்தான்கள் என்பது பன்மையாகவும், ஹாரூத், மாரூத் இருமையாகவும் - இருவரைக் குறிப்பதாக - உள்ளது. எனவே ஷைத்தான்கள் என்பதற்கு ஹாரூத், மாரூத் என்பது விளக்கமாக முடியாது என்பதே அந்த ஐயம்.

 'சில சமயங்களில் இருமைக்கு பன்மையும் பன்மைக்கு இருமையும் பயன்படுத்தப்படுவதுண்டு' என்று குர்துபி அவர்கள் விடையளிக்கின்றார்கள். இதற்குச் சான்றாக பின்வரும் வசனத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.

இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு

 (அல்குர்ஆன் 4:11)

இங்கே சகோதரர்கள் என்ற பன்மையான பதம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இரண்டு சகோதரர்கள் இருக்கும் போதும் இதுவே சட்டமாகும். இதில் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. இது போன்ற அரபு இலக்கியங்களிலும் பரவலாக நாம் காண முடியும். ஆகவே இந்த ஐயமும் அடிபட்டுப் போகின்றது.

ஷைத்தான்கள்' என்று அவ்வசனத்தில் கூறப்படுவோர் ஹாரூத், மாரூத் என்போர் தான் என நாம் குறிப்பிடுகிறோம். அதன் இலக்கண விதியையும் விளக்கி உள்ளோம்.

 'ஷயாதீனு' என்பதற்கு, ஹாரூத், மாரூத் என்பது விளக்கம் என்றால் ஹாரூது, மாரூது' என்று உகரத்தில் அவ்வார்த்தையின் இறுதி அமைய வேண்டும். ஏனெனில் ஷயாதீனு' என்பதன் இறுதி உகர'த்தில் அமைந்துள்ளது என்று சிலர் ஆட்சேபிப்பர்.

இவ்வசனத்தில் ஷயாதீன் என்பது இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷஹாதீனு என்று உகரக் குறியீட்டுடன் ஒரு தடவையும், ஷயாதீன என்று அகரக் குறியீட்டுடன் ஒர தடவையும் இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அகரக் குறியீட்டுடன் பயன்படுத்தப்பட்டுள்ள ஷயாதீன என்பதைக் கவனத்தில் கொண்டு ஹாரூத மாரூத என்பதும் அகரக் குறியீட்டுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் இந்தச் சந்தேகம் நீங்கி விடும்.

மனிதர்களில் உள்ள ஷைத்தான்கள் தான் ஹாரூத், மாரூத் என்றால் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். இதைக் கற்று காபிர்களாகி விடாதீர்கள் என்று எச்சரிக்காமல் எவருக்கும் அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை' என்று இறைவன் கூற மாட்டான். மலக்குகளாக இருந்தால் தான் அவ்வாறு கூறியிருக்க முடியும் என்பது சிலரது ஆட்சேபனை.

இந்த காரணத்தைக் கூறி அவர்கள் மலக்குகள் என வாதிக்க முடியாது. காரணம் மோசமான அல்லது சிரமமான ஒரு கலையில் தேர்ந்தவர்கள் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் போது 'உனக்கேன் இந்த வேண்டாத வேலை' என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுவது சகஜமானது தான். எனவே அவர்கள் பயன்படுத்திய இந்த வாசகத்தின் காரணமாக அவர்கள் மலக்குகள் என வாதிக்க முடியாது. மேலும் அவர்கள் மலக்குகளாக இருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களை நாம் கூறியுள்ளோம். அவற்றுக்கு முரணில்லாத வகையிலே இதை விளங்க வேண்டும்.

நாங்கள் சோதனையாக இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்களே! சோதனையாக இருக்கிறோம் என்பதை மலக்குகள் தானே கூறியிருக்க முடியும் என்று வேறு சிலர் ஆட்சேபனை செய்யலாம்.

சோதனையாக என்று தமிழாக்க.ம் செய்யுமிடத்தில் ஃபித்னா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஃபித்னா என்ற பதத்துக்கு சோதனை என்ற அர்த்தம் இருப்பது போலவே குழப்பம்' என்ற அர்த்தமும் உண்டு.

நாங்கள் குழப்பம் செய்பவர்கள் என்று பொருள் கொண்டால் எவ்வித முரண்பாடும் இன்றி எந்த வசனத்துடனும் மோதுதலின்றி பொருந்திப் போகின்றது.

உண்மையை உள்ளபடி அறிய அல்லாஹ் துணை செய்வானாக-