/indian-express-tamil/media/media_files/2026/01/02/jacto-geo-strike-tn-government-employees-protest-cm-stalin-old-pension-scheme-tamil-nadu-ev-velu-pota-geo-tn-teachers-union-protest-2026-01-02-13-34-31.jpg)
JACTO GEO strike| TN Government Employees Protest| CM Stalin| Old Pension Scheme
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டா-ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு சார்பில் இன்று (ஜனவரி 2, 2026) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையின் பின்னணி:
பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையையும், பின்னர் டிசம்பர் 30-ஆம் தேதி இறுதி அறிக்கையையும் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தக் கோரி, ஜனவரி 6 முதல் காலவரையற்ற போராட்டம் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் அடங்கிய குழு, டிசம்பர் 22-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசியது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என சங்கங்கள் அறிவித்தன. பேச்சுவார்த்தை முறையாக நடத்தப்படவில்லை என்றும் சங்கங்கள் குற்றம் சாட்டின.
இந்தச் சூழலில் போராட்டம் அறிவித்த அரசு ஊழியர் சங்கங்களுடன் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். முதலமைச்சர் திருச்சிக்குச் சென்றிருந்ததால், அவர் சார்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இருவரும் இந்தக் குழுவில் பங்கேற்றனர்.
இதில் 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நாளை முக்கிய அறிவிப்பு: ஜாக்டோ-ஜியோ பேட்டி
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், பின்வரும் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தனர்:
”ஓய்வூதியம் கட்டாயம் உண்டு என்ற உத்தரவாதம் அமைச்சர்கள் குழுவால் வழங்கப்பட்டிருக்கிறது. 23 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, முதலமைச்சர் நாளை (சனிக்கிழமை) ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்ற செய்தியை அமைச்சர்கள் குழு எங்களிடம் சொன்னார்கள்.
ஏனைய 10 அம்சக் கோரிக்கைகள் குறித்தும் பேசப்பட்டு, அவை நிச்சயமாக முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும், உடனடியாகத் தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். முதலமைச்சர் அறிவித்த பிறகுதான், அந்த ஓய்வூதியத் திட்டம் எப்படிப் பயன்படும் என்பதை முடிவு செய்து, மேற்கொண்டு போராட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும்” என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி கூட இருக்கும் நிலையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாகச் சனிக்கிழமை தமிழக முதல்வர் அறிவிக்க இருக்கும் முக்கிய முடிவு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
source https://tamil.indianexpress.com/tamilnadu/jacto-geo-strike-tn-government-employees-protest-cm-stalin-old-pension-scheme-tamil-nadu-ev-velu-pota-geo-tn-teachers-union-protest-10965569





