/indian-express-tamil/media/media_files/2026/01/04/venisueala-2026-01-04-16-33-18.jpg)
வெனிசுலாவின் கராகஸில் உள்ள லா கார்லோட்டா விமான நிலையத்தில், சனிக்கிழமை (03.01.2026) வெடிச்சத்தங்கள் மற்றும் குறைந்த உயரத்தில் விமானங்கள் பறந்த சத்தங்கள் கேட்ட பிறகு புகை மூட்டம் எழுகிறது.
அமெரிக்கா வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்த ஒரு நாளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை இந்தியா இந்த நிகழ்வுகள் குறித்து தனது "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியுள்ளது. மேலும், "சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும், பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும்" என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும், புது டெல்லி அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கவில்லை.
இந்திய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “வெனிசுலாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாகும். அங்கு உருவாகி வரும் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்தது.
வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது குறித்த செய்திக்குறிப்பை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அனைவரும் பிரச்சினைகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நிகழ்ந்த முன்னேற்றங்களைத் தொடர்ந்து, இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வெளியுறவு அமைச்சகம் பயண ஆலோசனையை (Advisory) வெளியிட்டுள்ளது.
"வெனிசுலாவின் சமீபத்திய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் வெனிசுலாவிற்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் ஒரு காரணத்திற்காக வெனிசுலாவில் இருக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் மின்னஞ்சல் (cons.caracas@mea.gov.in) அல்லது அவசர தொலைபேசி எண் 58-412-9584288 (வாட்ஸ்அப் அழைப்புகளுக்கும்) மூலம் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று வெளியுறவு அமைச்சகம் தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனின் பல மாத கால தீவிர அழுத்தத்திற்குப் பிறகு, அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்கா உரிமை கோரியுள்ளது. இந்த அசாதாரண இரவு நேர இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
இந்தியாவில், இடதுசாரி கட்சிகள் வெனிசுலா மீதான தாக்குதலுக்காகவும், அதிபர் மதுரோவைக் கைது செய்ததற்காகவும் அமெரிக்காவைக் கண்டித்துள்ளன. சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினர் எம்.ஏ. பேபி, இந்த இரவு நேர இராணுவ நடவடிக்கையை "அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் சர்வதேச பயங்கரவாதச் செயல்" என்று விமர்சித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/india-expresses-deep-concern-us-attacks-venezuela-calls-dialogue-ensure-peace-stability-10970929





