புதன், 21 ஜனவரி, 2026

உலகிலேயே பாதுகாப்பான நகரம்: 10 வருடமாக யாராலும் அசைக்க முடியவில்லை; எங்கு உள்ளது தெரியுமா?

 ஒரு நகரத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாகும். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் எந்தவொரு பாகுபாடும் இன்றி அந்த பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது Numbeo உலகளாவிய பாதுகாப்பு வரிசையில் அபுதாபி மீண்டும் உலகின் பாதுகாப்பான நகரம் என்ற இடத்தை பிடித்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 10 ஆண்டுகளாக அபுதாபி இந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

2026-ஆம் ஆண்டு பாதுகாப்பு அறிக்கையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதாவது பகல் மற்றும் இரவில் பாதுகாப்பாக நடப்பது உட்பட ஒட்டு மொத்த பாதுகாப்பு பட்டியலில் அபுதாபி முதல் இடத்தில் உள்ளது. குடியிருப்பாளர்கள், வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் என அனைவரும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பை உணரும் ஒரு நகரத்தை உருவாக்க மேம்பட்ட தொழில்நுட்பம், காவல் உத்திகள் போன்றவற்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 

2017 முதல் அபுதாபியின் முறியடிக்கப்படாத சாதனை

அபுதாபியின் இந்த சாதனை 2017-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை இந்த சாதனையை முறியடிக்க எந்த நகரமும் முன் வரவில்லை. உலகளாவிய நகரங்களை விட அபுதாபி அதன் பொறுப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த நிலைத் தன்மை தற்செயலானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

அபுதாபி முதல் இடத்தை எப்படி தக்க வைக்கிறது?

டிஜிட்டல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வு ஆகியவை தான் இந்த வெற்றிக்கு காரணம் என அபுதாபி காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அகமது சைஃப் பின் ஜைதூன் அல் முஹைரி தெரிவித்துள்ளார். அபுதாபி போன்ற நாடுகளில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. இதனால் தான் அந்த நாடுகளில் பெரும்பாலும் குற்றங்கள் நடைபெறுவதில்லை என்று அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வளைகுடா பாதுகாப்புத் தன்மையை வெளிப்படுத்துவதில் அபுதாபி மட்டும் தனியாக இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் உள்ள பிற எமிரேட்ஸ் மற்றும் நகரங்களும் பாதுகாப்பு தரவரிசையில் குறிப்பிடத்தக்க உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அபுதாபி வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் தற்போது அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் அபுதாபியை வேலை செய்யும் இடமாக மட்டுமல்லாமல் நிரந்தர குடியேறுவதற்கான இடமாகவும் பார்க்கின்றனர்.



source https://tamil.indianexpress.com/international/worlds-safest-city-for-10th-straight-year-read-full-story-11015256