/indian-express-tamil/media/media_files/2026/01/18/trump-2026-01-18-16-12-34.jpg)
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா முனையை மீண்டும் மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், டிரம்ப் தலைமையில் ‘அமைதி வாரியம்’ எனும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த உயர்நிலைக் குழுவில் சேரும் நாடுகள் ஒரு பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று வரைவு சாசனம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. வரைவு சாசனத்தின்படி, வாரியத்தின் தலைவராக டிரம்ப் பணியாற்றுவார். யார் உறுப்பினாரக வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவை அவர் தான் எடுப்பார்.
பெரும்பான்மை வாக்குகளால் முடிவு எடுக்கப்படும் என்றாலும் அனைத்து முடிவுகளுக்கும் தலைவரின் ஒப்புதல் தேவை. ஒவ்வோர் உறுப்பு நாடும் 3 ஆண்டுகள் வரை பதவி வகிக்கும். இருப்பினும், சாசனம் வெளிவந்த முதல் ஒரு வருடத்துக்குள் அமைதி வாரியத்துக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியளிக்கும் உறுப்பு நாடுகளுக்கு இந்த 3 ஆண்டுகால உறுப்பினர் காலம் பொருந்தாது என்று கூறுகிறது. இந்த வரைவு சாசனம் குறித்த செய்திகள் பேசுபொருளாகிய நிலையில், இதனை அமெரிக்க வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கட்டணம் தொடர்பான செய்தி தவறானது. அமைதி வாரியத்தில் சேர குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணம் என எதுவும் தேவையில்லை.
இது அமைதி, பாதுகாப்பு, செழிப்புக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நட்பு நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளது.
மூன்று நாடுகள் வரைவு சாசனத்தை ஒப்புக் கொண்டவுடன் வாரியம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்படும். வாக்களிப்பு கூட்டங்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது நடத்தப்படும். கூடுதம் கூட்டங்கள் தலைவரின் விருப்பப்படி கூட்டப்படும். வாரியத்தில் உள்ள உறுப்பினர்களை வாக்கின் அடிப்படையில் நீக்கும் அதிகாரமும் டிரம்பிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அமைதி வாரியத்தில் சேர அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே மற்றும் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்ட பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இஸ்ரேலுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும் அதன் கொள்கைக்கு எதிரானது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பல நாடுகள் இந்த திட்டத்தை எதிர்ப்பதாகவும் இது இஸ்ரேலின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
source https://tamil.indianexpress.com/international/donald-trump-seeks-1bn-from-nations-for-seat-on-board-of-peace-11010037





