சனி, 3 அக்டோபர், 2026

உத்திரப் பிரதேசத்தில் மீண்டும் ஒரு வலுவான இடத்தைப் பெற்று தருமா?

 

எழுதியவர்: மெளல்ஸ்ரீ சேத்

உத்திரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை மாலையில் தனது அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஆராதனா மிஸ்ரா மோனாவை தனது மாநிலத் தலைவராகவும், சஹாரன்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூதை செயல் தலைவராகவும் நியமித்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி பிரமோத் திவாரியின் மகளான ஆராதனா மிஸ்ரா, 2023 ஆகஸ்ட் முதல் உத்திரப்பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த அஜய் ராய்க்குப் பதிலாகப் பொறுப்பேற்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் உத்திரப்பிரதேச பிரிவின் மூத்த துணைத் தலைவர்களாக தேவகிந்தர் நிஷாத் மற்றும் அலோக் பிரசாத் ஆகியோரையும் நியமித்துள்ளதாகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஃபரேந்தா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ சவுத்ரி வீரேந்திர சிங், மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்த ஆராதனா மிஸ்ராவிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆராதனா மிஸ்ரா மற்றும் வீரேந்திர சிங் ஆகிய இருவர் மட்டுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களாவர்.

இந்த நியமனங்கள் மூலம், காங்கிரஸ் கட்சி ஒரு சமூக சமநிலையை ஏற்படுத்த முயன்றுள்ளது. மாநிலத் தலைவராக ஒரு பிராமணர், செயல் தலைவராக ஒரு முஸ்லிம், மூத்த துணைத் தலைவர்களாக ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (தேவகிந்தர் நிஷாத்) மற்றும் ஒரு தலித் (அலோக் பிரசாத்) என இந்தியா கூட்டணியின் சமாஜ்வாதி கட்சியின் பி.டி.ஏ  (பிக்டா, தலித், அல்ப்ஸங்க்யாக் - பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) கொள்கைக்கு ஏற்ப இந்த நியமனங்கள் அமைந்துள்ளன.

பதவியிலிருந்து விலகும் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என்னை போன்ற ஒரு சாதாரண தொண்டருக்கு உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை ஒப்படைத்ததற்காக ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் எனது வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். போராட்டம் இன்னும் தொடர்கிறது. புதிய தலைவர் உட்பட புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாம் போராடுவோம், நாம் வெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆராதனா மிஸ்ராவின் முக்கியத்துவம்

பிரதாப்கரின் ராம்பூர் காஸ் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராதனா மிஸ்ராவை, தேர்தல் ஆண்டில் கட்சியை வழிநடத்த காங்கிரஸ் தேர்ந்தெடுத்திருப்பது அவரது வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கைக் காட்டுகிறது. 

உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு பெண்ணை தனது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது மட்டுமல்லாமல், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பிராமணப் பெண் முகத்திற்கு மாறியுள்ளது என்பதாலும் இவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸின் கடைசி பெண் தலைவராக ரீட்டா பகுணா ஜோஷி இருந்தார் (2007 முதல் 2012 வரை). இவர் தற்போது பா.ஜ.க-வில் உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆராதனா மிஸ்ராவின் அரசியல் பயணம் அடித்தளத்திலிருந்தே தொடங்கியது. எம்.பி.ஏ (MBA) படித்த இவர், வட்டார அளவிலான தேர்தல் முறை மூலம் அரசியலில் நுழைந்து, 2014-இல் மாநிலச் சட்டப்பேரவைக்குத் தேர்வாகும் முன் ஒன்றியத் தலைவராக பணியாற்றினார்.

இவர் முதன்முதலில் 2014-ல் ராம்பூர் காஸ் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ல் மீண்டும் அதை தக்கவைத்துக்கொண்டார். மேலும் 2022-ல் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். இந்த மூன்று வெற்றிகள், அவரது தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும் தாண்டி அவருக்கு என தனியான ஒரு வாக்கு வங்கியைக் கொடுத்துள்ளன.

பிரியங்கா காந்தி வத்ராவின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸின் உத்திரப்பிரதேச பிரசாரத்திலும் ஆராதனா மிஸ்ரா ஒரு முக்கிய முகமாக இருந்தார். பிரியங்கா காந்தியின் உத்திரப்பிரதேச பயணங்களின் போது அவருடன் இணைந்து மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். மேலும் 2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் 'லட்கி ஹூன், லட் சக்தீ ஹூன்' (நான் பெண், என்னால் போராட முடியும்) பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

சமூக மற்றும் ஊரக வளர்ச்சியுடன் நீண்டகாலத் தொடர்பு கொண்ட ஒரு அடித்தளத் தொண்டர் என்று காங்கிரஸ் தலைவர்கள் இவரை விவரிக்கிறார்கள். இவரைப் பற்றிய குறிப்புகளின்படி, இவர் கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். மேலும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இம்ரான் மசூதின் வருகை

சஹாரன்பூர் எம்.பி செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, கட்சியின் தலைமைக்கு மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய முகத்தைச் சேர்த்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் மசூத் தேசிய அளவில் கவனத்திற்கு வந்தார். அக்கருத்துக்கள் அப்போது விமர்சனங்களையும் சட்ட நடவடிக்கைகளையும் ஈர்த்தன.

அவர் தொடர்ந்து தேர்தல் அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியுடனான குறுகிய காலத்திற்குப் பிறகு மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பி, 2024-ல் சஹாரன்பூரிலிருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவரது நியமனம், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

புதிய சமூக கூட்டணி

காங்கிரஸுக்குள், ஆராதனா மிஸ்ரா மற்றும் மசூத் ஆகியோரின் நியமனம் கட்சியில் பிராமணர் மற்றும் முஸ்லிம்களின் புதிய சமூகக் கூட்டணியின் எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. மசூதின் இந்த உயர்வானது, வரவிருக்கும் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் நடத்தி வரும் பேச்சுவார்த்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் சஹாரன்பூர் எம்.பி சமீபத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கட்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இரு கட்சிகளும் எப்போது, எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து மசூத் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், ஆராதனா மிஸ்ரா மற்றும் திவாரி குடும்பத்தினர் சமாஜ்வாதி கட்சித் தலைமையுடன் நல்லுறவை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதன் விளைவாக, சில காங்கிரஸ் தலைவர்கள் இந்த புதிய ஏற்பாட்டை இரண்டு வழிகளில் பயனுள்ளதாகப் பார்க்கிறார்கள். கட்சியின் சமூக ஆதரவை விரிவுபடுத்துவதுடன், 2027 தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சமாஜ்வாதி கட்சித் தலைமையுடன் சுமூகமாக பேசக்கூடிய தலைவர்களையும் இது வழங்குகிறது.

பி.டி.ஏ கொள்கை நடவடிக்கை

தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திர பால் கௌதம் மாநில அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளராக உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை வெள்ளிக்கிழமை ஒரு தலித் மற்றும் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூத்த துணைத் தலைவர்களாக நியமித்துள்ளது.

தேவகிந்தர் நிஷாத் கட்சியின் மீனவர் பிரிவின் தலைவராக உள்ளார். அலோக் பிரசாத் முன்னர் கட்சியின் பட்டியல் சாதியினர் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரைச் சேர்ந்தவர் ஆவார். கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சியின் பி.டி.ஏ (பிக்டா, தலித், அல்ப்ஸங்க்யாக்) கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், காங்கிரஸின் புதிய மாநிலத் தலைமைக்கு இருக்கும் சவால், இந்த சமூகப் பிரதிநிதித்துவத்தை களத்தில் அமைப்பின் விரிவாக்கமாக மாற்றுவதே ஆகும்


source https://tamil.indianexpress.com/india/can-a-brahmin-muslim-equation-give-congress-a-foothold-in-up-again-12618391