வெள்ளி, 2 அக்டோபர், 2026

டெல்லியில் என்னை 2 மணி நேரம் பிரைன் வாஷ் செய்தார்; நான் சொன்ன ஒரே பதில் இதுதான்: கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் மனம் திறந்த

 

TVK Thirumavalavan VCK Vijay alliance Maduranthakam constituency

பதவிக்காக அணி மாறவில்லை; வரலாற்று நியாயங்கள் உள்ளன - திருமாவளவன் விளக்கம்!

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, த.வெ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக் கிழமை இரவு (அக்.1) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அவர் பேசியதாவது,

"இப்போது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. வரவிருக்கும் அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு மாபெரும் கூட்டணி இங்கு அமைந்துள்ளது. ஏதோ ஒரு பதவிக்காகவோ, அல்லது சுயநலத்துக்காகவோ உருவான கூட்டணி அல்ல இது; மகத்தான கோட்பாடுகளையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி இந்த கூட்டணி உருவாகியுள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியான நாங்கள் இடம்பெற்றுள்ளோம். இந்தக் கூட்டணியை இமாலய வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது வரலாற்றுக்கடன்.

நமது கொள்கை தலைவர்கள் மற்றும் கூட்டணியின் நியாயம்
நம்முடைய கொள்கை தலைவர்கள் யார்? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர். அதே கொள்கை தலைவர்களைத்தான் இன்று தவெகவும் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ளது.

"திமுக கூட்டணியை விட்டு ஏன் வெளியேறினீர்கள்? திமுக கூட்டணி உடையாது என்று கூறிவிட்டு இப்போது தவெக கூட்டணியில் இணைந்ததற்குக் காரணம் என்ன?" என்று சிலர் கேட்கலாம். இதற்குப் பின்னால் பல வரலாற்று நியாயங்கள் உள்ளன. நாங்கள் பதவி ஆசைக்காகவோ, அதிகார வேட்கைக்காகவோ அணி மாறவில்லை. மக்கள் இன்று மாற்று சக்தியான தம்பி விஜய்யை தேர்வு செய்துவிட்டனர். நாம் எப்போதுமே தனி நபரை முன்னிறுத்தியோ, பதவிக்காகவோ முடிவு எடுத்தது கிடையாது.

கடந்த காலங்களைச் சற்று யோசித்துப் பாருங்கள். 2011 மற்றும் 2014 தேர்தல்களில் நாம் திமுகவுடன் தான் இருந்தோம். ஆனால், 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறியதற்கு நாங்கள் காரணமா? இல்லை! அன்று திமுக, "நாங்கள் 180 முதல் 200 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போகிறோம்; அதனால் நீங்கள் இந்த கூட்டணியில் தொடர வேண்டாம்" என்று நேரடியாகவே கூறிவிட்டார்கள். அந்தச் சூழலில்தான் நாங்கள் கண்ணியமாக வெளியேறினோம்.

அதிகார ஆசைகளைத் தாண்டிய கொள்கை உறுதி

அதேபோல், தவெக அமைச்சரவையில் பலரும் பலவிதமான கணக்குகளைப் பேசலாம். விசிகவில் பயணிக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர் ஆதவ் அர்ஜுனா. அவர் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, "கொள்கையை பேசுங்கள்.. ஆனால் எப்படியாவது அதிகாரத்திற்கு வர முயற்சி செய்யுங்கள்" என்று என்னை பலவாறாக அசைத்துப் பார்த்தார்.

ஆனால், நான் கொஞ்சமும் அசையவில்லை! அதிகாரம் இன்று வரும், நாளைப் போகும்; ஆனால், "பதவிக்காக ஒரு அணியை உடைத்தான் இந்த திருமாவளவன்" என்ற களங்கம் என் வாழ்க்கையில் எக்காலத்திலும் வரக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். டெல்லிக்கு வந்து என்னை இரண்டு மணி நேரம் அவர் பிரைன் வாஷ் செய்ய முயன்றார். அதிகார ஆசை, துணை முதல்வர் பதவி என்றெல்லாம் ஆசை காட்டிப் பார்த்தார்; பலரையும் தொடர்புகொண்டு பேசச் செய்தார். ஆனால், நான் தெளிவாக "ஸாரி" என்று சொல்லிவிட்டேன்.

அதன் பிறகு, ஒரு புத்தக வெளியீட்டுக்காக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை அவரது வீட்டில் சந்தித்தேன். ஸ்டாலின், ராகுல் காந்தியை வைத்து அந்தப் புத்தக வெளியீட்டை நடத்த அவர் நினைத்தார். ஆனால் திடீரென ஒருநாள் ஜான் ஆரோக்கியசாமியை எனக்கு அறிமுகம் செய்தார். தம்பி விஜய் அந்தப் புத்தகத்தை வெளியிட, நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அந்தச் சமயத்தில் தேர்தல் கூட்டணி முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இருப்பினும், அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் திமுக மற்றும் அரசியல் பேச வேண்டாம் என்று நான் ஆதவ் அர்ஜுனாவிடம் தெளிவாகக் கூறினேன். ஆனால், அவரோ விசிக எப்படியாவது அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று பேசி, என்னை மாற்றி சிந்திக்க வேண்டும் என்று கடுமையாகக் கட்டாயப்படுத்தினார். கட்சி ஒழுக்கத்தை மீறியதால் வேறு வழியின்றி அவரை 6 மாதம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய நேரிட்டது.

அதன் பின்னர் அவர் என்னிடம் வந்து, "நான் வேறு ஒரு முடிவு எடுத்துள்ளேன்; தம்பி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று என்னிடம் கூறினார். அவருடைய அந்த நல்ல முடிவை நான் மனதார ஏற்றுக்கொண்டு வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

இன்று தம்பி விஜய்யும் நாமும் கைகோர்த்து நிற்பதில் எந்தவித கொள்கை மாறுபாடும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, தமிழகத்தின் மாற்றத்துக்கான சக்தியாக இந்தக் கூட்டணி உருவெடுத்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு  வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” 

இவ்வாறு திருமாவளவன் அந்த கூட்டத்தில் பேசினார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, த.வெ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திவரும் பிரச்சாரக் கூட்டங்கள் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-thirumavalavan-vck-vijay-alliance-maduranthakam-constituency-maragatham-kumaravel-aadhav-arjuna-12615371