/indian-express-tamil/media/media_files/2026/10/01/calcutta-hc-2026-10-01-04-51-33.jpg)
எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் உள்ள 'பொதுப் பார்வை' என்ற நிபந்தனை சமூக ஊடகங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எழுதியவர்: அமால் ஷேக்
சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் சாதிய ரீதியிலான இழிவான கருத்துகளும் எஸ்.சி, எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றமாகப் பரிசீலிக்கப்படும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பொதுப் பார்வை’ என்பது நேரடி அல்லது நிலவியல் சார்ந்த இடங்களுக்கு மட்டும் உரியது அல்ல; அது டிஜிட்டல் தளங்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதி உதய் குமார் அடங்கிய தனிநபர் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் பிரிவு 3(1)(r) மற்றும் 3(1)(s)-ன் கீழ் உள்ள 'பொதுப் பார்வை' என்ற நிபந்தனை, எல்லைகளைக் கடந்து டிஜிட்டல் உலகிற்கும் நீட்டிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சாதி தொடர்பான அனைத்துக் கருத்துகளும் எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும், சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தியாகின்றனவா என்பதை நீதிமன்றங்கள் உன்னிப்பாக ஆராய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியிருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சட்டம் என்ன சொல்கிறது?
எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் 3(1)(r) மற்றும் 3(1)(s) பிரிவுகள், பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி வெளிப்படையாக (உள்நோக்கத்துடன்) அவமதிப்பது, மிரட்டுவது அல்லது 'பொதுப் பார்வையில் உள்ள எந்தவொரு இடத்திலும்' வசைபாடுவதைக் குற்றமாக்குகின்றன.
இக்குற்றத்தை உறுதிசெய்ய மூன்று முக்கியக் காரணிகள் தேவை:
குற்றம் சாட்டப்பட்டவர் எஸ்.சி அல்லது எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது.
அந்தச் செயல் பாதிக்கப்பட்டவரைச் சாதியின் பெயரால் அவமானப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்தச் சம்பவம் 'பொதுப் பார்வையில்' உள்ள ஒரு இடத்தில் நடந்திருக்க வேண்டும்.
டிஜிட்டல் வழக்குகளில் இந்த மூன்றாவது நிபந்தனையே முதன்மையான கேள்வியாக எழுகிறது.
'ஹிதேஷ் வர்மா எதிர் உத்தரகாண்ட் மாநில அரசு' (2020) வழக்கில் உச்ச நீதிமன்றம், "பொதுப் பார்வை" என்பது பொதுமக்கள் ஒரு சம்பவத்தைக் காணவோ அல்லது கேட்கவோ கூடிய இடத்தைக் குறிக்கும் என்று கூறியிருந்தது. "பொதுமக்கள் இல்லாத நான்கு சுவர்களுக்குள் ஒரு சம்பவம் நடந்தால், அதை பொதுப் பார்வையில் நடந்ததாகக் கூற முடியாது" என்றும் குறிப்பிட்டிருந்தது.
அதேபோல கடந்த மாதம், 'ராம்கிருஷ்ணா சௌஹான் எதிர் உத்தரப் பிரதேச மாநில அரசு' வழக்கில், பள்ளி வளாகத்திற்குள் சம்பவம் நடந்திருந்தாலும், பொதுமக்கள் பார்க்கும் அல்லது கேட்கும் சூழலில் அது கூறப்பட்டதா என்பதைப் பொறுத்தே 'பொதுப் பார்வை' என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கை ரத்து செய்தது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மனுதாரர் ஒருவர், ஃபேஸ்புக் பக்கத்தில் இரு நபர்கள் தனது சாதி, மதம், கடவுள் மற்றும் குடும்பத்தைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வசைபாடியதாகப் புகார் அளித்தார். எனினும், கொல்கத்தா சைபர் காவல் நிலையம் மூலம் அணுகியும் ஃபேஸ்புக் நிறுவனம் பயனரின் விவரங்களை வழங்கவில்லை எனக் கூறி, காவல்துறை வழக்கை முடித்து ‘குற்றம் உண்மை; ஆனால் குற்றவாளி பற்றிய துப்பு கிடைக்கவில்லை’ (Final Report True, No Clue) என அறிக்கை தாக்கல் செய்தது. அலிபூர் சிறப்பு நீதிமன்றமும் மனுதாரரின் மனுவை நிராகரித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், "ஒவ்வொரு குற்றவியல் வழக்கையும் அதன் தனித்துவமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே அணுக வேண்டும்" என்று கூறியது.
மேலும் 'பொதுப் பார்வை' குறித்து விளக்கமளித்த நீதிமன்றம், அது நிலவியல் எல்லைகளைத் தாண்டி டிஜிட்டல் தளங்களுக்கும் பொருந்தும் என்றது. சைபர் விசாரணையில் துப்பு கிடைக்கவில்லை என்பதற்காக, மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சி.ஐ.ட்) சைபர் தடயவியல் அல்லது ஐ.பி-லாக் (IP-log) கண்காணிப்பு முறைகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் காவல்துறை "ஆதாரம் இல்லை" என வழக்கை முடிக்க முடியாது என்று கண்டித்தது.
பிற நீதிமன்றங்களின் பார்வைகள்
'சூரஜ் வி. சுகுமாரன் எதிர் கேரளா மாநில அரசு' (2022) வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இருந்தே சமூகம் மாற்றமின்றி இருக்கிறது என்ற கோணத்தில் நீதிமன்றங்கள் சட்டத்தை அணுக முடியாது என்று கூறியிருந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப சட்டங்களை விளக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், சாதி ரீதியிலான அவமானங்களைத் தடுக்க கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தைக் குறுகிய பார்வையில் அணுகினால் சட்டத்தின் நோக்கம் வீணாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியது. இணையத்தில் பதிவேற்றப்படும் தகவல்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பாதிக்கப்பட்டவர் அந்தப் பதிவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவர் நேரடியாக அங்கே இருப்பதாகவே கருதப்பட்டு 'பொதுப் பார்வை' என்ற நிபந்தனை பூர்த்தியாகிறது என்றும் கேரள உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
source https://tamil.indianexpress.com/explained/sc-st-act-applies-to-casteist-slurs-on-social-media-calcutta-high-court-12611061





