வியாழன், 20 ஜூன், 2013

சாலை விபத்தில்

புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதி்யதால் மினிவேனில் சென்ற பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் ஒட்டுனர் உள்பட 9 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்களும், கிளீனரும் பலத்த காயமடைந்தனர்.
புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வல்லத்திராக்கோட்டையில் இயங்கி வரும் அரசு மேனிலைப்பள்ளியில் சுற்று வட்டாத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, பலர் மிதிவண்டி மூலமும், பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வல்லத்திராக்கோட்டை அருகே உள்ளடங்கியுள்ள விஜயரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 பேர் பள்ளி செல்வதற்காக புதன்கிழமை காலையில் அங்கு வழக்கமாக பால் ஏற்றிச்செல்ல வந்க மினி வேனை மறித்து பள்ளி அருகே இறக்கிவிட வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து அனைவரையும் ஓட்டுனர் ஆறுமுகம் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றபோது பூவரசக்குடி கிராமத்தருகே அறந்தாங்கியிலிருந்து எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில், மினி வேன் சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதனால் வேனில் பால் கேன்களிடையே நின்று கொண்டு பயணித்த பள்ளி மாணவர்கள் மு. அருண்குமார்(12), ரா. சத்யா(15), சு. மதியழகன்(16), ரா. நாராயணசாமி(14), அ. விஷ்ணு(16), மு. மணிகண்டன்(15), சு. சிவகுமார்(14), வேன் ஓட்டுனர் ஆறுமுகம்(32) உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வேனில் பயணம் செய்த விக்னேஷ் என்ற மணிகண்டன்(16), ராஜேஷ்குமார்(14), வேன் கிளீனர் தியாகராஜன்(30) ஆகியோர் பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான், கு.ப.கிருஷ்ணன், சி. விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட திமுக செயலர் பெரியண்ணன்அரசு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

புதுக்கோட்டை-அறந்தாங்கி இடையே தனியார் பேருந்து இயக்க தடை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கு தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் தடைவிதித்தார்.மேலும், தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்துக்கும் உத்தரவிட்டார்.

பேருந்து வசதியில்லாததால் லிப்ட் கேட்ட மாணவர்கள்:
உயிரிழந்த மாணவர்களின் கிராமமான விஜயரகுநாதபுரத்தில் இருந்து 4 கி.மீ, தொலைவிலிருந்து பிரதான சாலைக்கு வரவேண்டும். அங்கிருந்து பேருந்து மூலம் 4 கி.மீ. தொலைவி்ல் உள்ள பள்ளி இருக்கும் ஊரான வல்லத்திராகோட்டைக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் தங்கள் கிராமத்தில் இருந்து பேருந்து வசதி இல்லாததால் ஊருக்குள் வரும் வாகனங்களில் லிப்ட் கேட்டு பிரதான சாலைக்கு செல்வது வழக்கம். அதன்படி பால் வண்டியில் லிப்ட் கேட்டு ஏறிசென்ற மாணவர்களின் உயிர் பறிபோனது.

நிற்காமல் செல்லும் பேருந்துகள்:
வல்லத்திராகோட்டை வழியாக புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி இடையே ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கைக்குறிச்சி,பூவரசகுடி, வாண்டாகோட்டை, கீழையூர் உள்ளிட்ட ஊர்களில் பேருந்துகள் நிறுத்துவதில்லை. நிற்காமல் செல்லும் பேருந்துகளில் அரசு, தனியார் என எவ்வித வேறுபாடும் இல்லை. இவ்வழித்தடத்தில் குறைந் எண்ணிக்கையில் இயக்கப்படும் நகர் பேருந்துகளும் பள்ளி நேரங்களில் இயக்கப்படுவதில்லை. கூடுதல் பேருந்து வசகி கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தியும், மனுக்கள் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என இப்பகுதி் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் இறுதிசடங்கு:
இறந்த மாணவர்களின் உடலுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவசர வாகனம் மூலம் விஜயரகுநாதபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மாணவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது.