செவ்வாய், 1 அக்டோபர், 2013

பட்டுப்புழு வளர்ப்பு

குறைவான முதலீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு


குறைவான முதலீட்டில் மாற்று பயிர் செய்து கூடுதல் லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு வாய்ப்பாக பட்டுப்புழு வளர்ப்பு தொழில் விளங்கி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் பிரபலமான இந்த தொழில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளையும் கவர்ந்து வருகிறது.

பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் தொழிலான பட்டு உற்பத்திக்கு ஆதாரம், ஒரு மாதம் மட்டுமே வாழ்நாளை கொண்ட பட்டுப் புழுக்களே.

இந்த பட்டுப்புழுக்களுக்கு உணவு மல்பரி இலைகள்.

2 அல்லது 3 ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகள் கூட மல்பரியை பயிரிடலாம்.

பட்டுப்புழுக்களை வளர்ப்பதற்கான கொட்டகைகள் அமைக்கவும், இயந்திரங்கள் வாங்கவும் மத்திய, மாநில அரசுகள் மானிய உதவிகள் செய்கின்றன.

பட்டுப்புழுக்கள் கட்டும் கூடுகளே பட்டுநூலுக்கு ஆதாரம்.

இந்த பட்டுக்கூடுகளை கிலோ 500 ரூபாய் வீதம் பட்டு கூட்டுறவு நிலையங்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

இந்த பட்டுக் கூடுகளில் இருந்தே பட்டு நூல் எடுக்கப்பட்டு நெசவாளர்களால் பட்டுத் துணியாக நெய்யப்படுகிறது.

பட்டுப்புழு வளர்ப்பு நிலைகள்

பட்டுப்புழு வளர்ப்பு மூன்று நிலைகளில் நடைபெறுகின்றன.
பட்டுப்புழு முட்டையில் இருந்து ஒருவாரத்திற்கு ஒரளவு வளர்ந்த நிலைக்கு வளர்க்கப்படுவது இளம் பட்டுப்புழு வளர்ப்பு ஆகும்.

இதன் பிறகு பட்டுப்புக்கூடு உருவாகும் வரை அடுத்த 18 நாட்கள் வளர்க்கப்படுவது முதிர்ந்த பட்டுப்புழு வளர்ப்பாகும்.

மூன்றாவது நிலையில் பட்டுக்கூடுகள் பிரித்தெடுக்கப்பட்டு பட்டு கூட்டுறவு நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மானிய விபரம்

பட்டுப்புழு வளர்ப்புக்கு மல்பரி பயிரிடுவது, அதற்கான சொட்டு நீர் பாசன அமைப்பு, பட்டுப்புழு வளர்ப்பதற்கான கொட்டகை, மல்பரியை வெட்டும் இயந்திரம், உபகரணங்கள் என அனைத்திற்கும் மத்திய- மாநில அரசுகள் மாநில உதவிகள் வழங்குகின்றன.

மல்பரி பயிரிட ஏக்கருக்கு 1500 ரூபாய் கிடைக்கிறது.

சொட்டு நீர் பாசன அமைப்புக்கு முழு மானிய உதவியும் கிடைக்கிறது.

கொட்டகை அமைக்க 60 சதவிகிதம் மானியம் கிடைக்கிறது.

இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு குறைந்த பட்சம் 60 சதவிகிதம் முதல் 100 சதவிகித மானியம் கிடைக்கிறது.

வருமானம் எவ்வளவு?

ஒரு வாரம் வளர்ந்த இளம் பட்டுப்புழுக்களை பொறுத்தவரை , 400 புழுக்கள் கொண்ட ஒரு முட்டை வளர்த்து 8 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது.

3 ஏக்கரில் மல்பரி பயிரிடும் போது மாதத்திற்கு 15 ஆயிரம் முட்டைகள் வரை வளர்க்கலாம்.

முதிர்ந்த பட்டுப்புழுக்களில் இருந்து பெறப்படும் பட்டுக்கூடுகள் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது