திங்கள், 24 ஜூன், 2019

15 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து வியக்க வைக்கும் பொறியாளர்..! June 24, 2019


Image
சிதம்பரத்தில், கடந்த 15 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து வரும் பொறியாளர் ஒருவர், மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்த பொறியாளர் ராஜா, தனது வீட்டுக்கு உள்ளேயே குழி தோண்டி, 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று தொட்டிகளை அமைத்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு 75 ஆயிரம் ரூபாய் செலவில் அவர் அமைத்த தொட்டிகள் மூலம், ஆண்டு முழுவதும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கிறது. பல இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமக்கு இதுவரை தண்ணீர் தட்டுப்பாடே ஏற்படவில்லை என பொறியாளர் ராஜா தெரிவித்தார்.
தொட்டியில் சேமித்தது போக கிடைக்கும் உபரி நீரை, குழாய் மூலம் பூமிக்குள் விட்டு விடுகிறார். இதனால் நிலத்தடி நீர் உயர்கிறது. செங்கட்டான் கிராமத்தில் உள்ள மற்ற வீடுகளில், சுமார் 70 அடியில் தண்ணீர் கிடைக்கும் நிலையில், தன்னுடைய வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 22 அடியிலேயே தண்ணீர் கிடைப்பதாக ராஜா கூறினார். 

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து, வருங்கால சந்ததியினருக்கு தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென ராஜா வலியுறுத்தியுள்ளார். மேலும், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க அரசு மானியம் வழங்க வெண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், அப்படி வழங்கினால் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க மக்கள் முன்வருவார்கள் என்றும் கூறினார்.