சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள், மழை நீர் சேமிப்பு முறை மூலம் ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்து வைத்துள்ளது.
தமிழக தலைநகரான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருக்காக பல நாட்கள் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 2020ம் ஆண்டிற்குள் சென்னையில் நிலத்தடி நீரின் அளவு பல மடங்கு குறைந்துவிடும் என்கிற அளவிற்கு சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியின் நீர் இருப்பு அளவு மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. அதனைத்தொடர்ந்து, தற்போது டைட்டானிக் படத்தின் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோவும் சென்னை குடிநீர் பஞ்சத்தை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
தற்போது உலக அளவில் பேசப்படும் சென்னை குடிநீர் பிரச்சனைக்கான முக்கிய தீர்வாக மழையை மட்டுமே நம்பி இருக்கின்றனர் சென்னைவாசிகள். தண்ணீரை வீணாக்க கூடாது என்ற எண்ணமும், மழை நீரை சேமித்துவைக்கவேண்டும் என்ற விழிப்புணர்வும் சென்னை மக்கள் மத்தியில் வந்துவிட்டது என்றே கூறலாம். இதற்கு சான்றாக, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்து வைத்துள்ளனர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் விழும் மழைநீர் அனைத்தும் இரண்டு பெரிய Tank-க்கிற்குள் சென்று, பின்னர் மற்றொரு பெரிய Tank-ற்குள் செல்லுமாறு வடிவமைக்கப்படுள்ளது. அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்ததன் மூலம் தண்ணீருக்காக செலவழிக்கப்படும் பல ஆயிரம் பணத்தை சேமித்ததாகவும் மற்ற பகுதிகளில் உள்ள அனைவரும் இந்த மழை நீர் சேமிப்பு முறையை பயன்படுத்தி நீரை சேமிக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.