வியாழன், 10 அக்டோபர், 2013

#குர்பானியின்சட்டங்கள்

யார்மீது கடமை?

இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. 

பொதுவாக ஒரு கடமையைச் செய்ய வலியுறுத்தப்பட்டால் அதைச் செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்ற வேண்டும். 

முக்கியமான சுன்னத்

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளது.

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُضْحِيَةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلَاةِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ رواه البخاري

ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தியாகப் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்து விட்டிருப்பதைக் கண்டபோது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) நூல் : புகாரி (5500)

திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் திருக்குர்ஆனும் இதை வலியுறுத்தியுள்ளது.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ(2) سورة الكوثر
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன் 108: 1,2)