வியாழன், 12 மார்ச், 2026

90 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் இருப்பு உள்ளது: பீதியடைய வேண்டாம் - பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவுறுத்தல்

 12 3 2026


Petrol Diesel shortage rumors India Petrol bunk rush Chennai Trichy

Petrol Diesel shortage rumors India |Petrol bunk rush Chennai, Trichy

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கடந்த சில மணிநேரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி வருகின்றனர். பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படப்போவதாகவும், அதன் விலை மளமளவென உயரப்போவதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களே இந்தத் திடீர் கூட்டத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 லிட்டர் தண்ணீர் கேன்களில் பெட்ரோலை நிரப்பிச் செல்லும் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.

எரிபொருள் மட்டுமின்றி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரைப் பெறுவதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல ஏஜென்சி அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிலிண்டர்களைப் பதிவு செய்து பெற்று வருகின்றனர்.

பாரத் பெட்ரோலியம் விளக்கம்: 

இந்த விவகாரம் தொடர்பாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளது. சர்வதேச அளவில் எந்தவொரு குறுகிய கால நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவிடம் உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை மட்டுமே இந்தியா நம்பியிருக்கவில்லை; நம்மிடம் மாற்று வழித்தடங்கள் உள்ளன. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட வேண்டாம்," என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

petrol bunk

7000 பங்குகளில் தடையற்ற விற்பனை

தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க மாநிலத் தலைவர் முரளி இதுகுறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்:

நாடு முழுவதும் அடுத்த 90 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 7,000 பெட்ரோல் பங்குகளிலும் விநியோகம் சீராக நடைபெறுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு வழங்கும் கடனை மட்டுமே நிறுத்தியுள்ளன, எரிபொருள் விநியோகத்தை அல்ல.

மக்கள் தேவைக்கு அதிகமாக வாங்கிச் சேமித்தால் மட்டுமே 'செயற்கை தட்டுப்பாடு' உருவாகும்.மேலும், கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வாங்குவது மிகவும் ஆபத்தானது என்றும், பொதுமக்கள் வதந்திகளுக்குச் செவிசாய்க்காமல் இயல்பு நிலை பேண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/petrol-diesel-shortage-rumors-india-petrol-bunk-rush-chennai-trichy-11206324