செவ்வாய், 28 அக்டோபர், 2025

எஸ்.ஐ.ஆர்: நவ. 2-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தி.முக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

 

Stalin dmk alliance leaders

வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகளை தற்போது தொடங்குவது சரியானது அல்ல என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது அவசர கதியில் இப்பணிகளைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதாக தி.மு.க கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) அடுத்ததாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

28 10 2025

இதைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையும், ஜனநாயகத்தை சின்னாபின்னப் படுத்துவதையும் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதே ஒன்றிய பா.ஜ.க அரசின் வழக்கமான பழக்கம் ஆகும். அதற்கு ஏற்ப தன்னாட்சி பெற்ற அமைப்புகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைத்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன. முறையான தேர்தல், வெளிப்படையான தேர்தல், நேர்மையான தேர்தல், உண்மையான தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே பணியாகும். ஆனால் சமீபகாலமாக தங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் மூலமாக சந்தேகத்துக்குரிய தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதற்கு வெளிப்படையான உதாரணமாக பீகார் தேர்தல் அமைந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமானது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்திருந்தது என்பதைக் கண்டோம்.

நம்பிக்கைக்குரிய தகவல்களின்படி பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். பின்னர் சில லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மாண்பமை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவையே தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை. பின்பற்றவில்லை. செயல்படுத்த தயாராக இல்லை. இந்த ஜனநாயக விரோத செயலை செய்ய தூண்டியது ஒன்றிய பா.ஜ.க அரசு ஆகும்.

இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாட்டுக்கான தேதிகளை அறிவித்துள்ளார். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற பணிகளை நடத்துவது என்பது மிகமிகச் சிரமம் ஆகும். வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இது போன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும். நடைமுறை சாத்தியம் இல்லாத காலத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. புகைப்படம் ஒட்டித் தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணையத் தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?

வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்யத் தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றம்சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும்.

இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 - ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி அளிக்கிறோம்.

மக்களாட்சியையும், மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடைபெற்ற தி.மு.க கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ‘தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம், வாக்குத் திருட்டை முறியடிப்போம்’ என்று தலைப்பிட்டு பதிவிட்டிருப்பதாவது: “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் எஸ்.ஐ.ஆர் (எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.

மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-sir-election-commission-tamil-nadu-dmk-alliance-parties-all-party-meeting-10598723