28 10 2025
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று புயலாக மாறியுள்ளது. மோன்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் நெருங்கி வருவதால், லேசானது முதல் கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
மோன்தா புயல் காக்கிநாடாவில் இருந்து 570 கி.மீ., விசாகப்பட்டினத்தில் இருந்து 600 கி.மீ., மற்றும் சென்னையில் இருந்து 520 கி.மீ. தொலைவில் மேலும் தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு-மத்திய வங்கக் கடலில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல், இன்று (அக்டோபர் 28) இரவுக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மணிக்கு 90-110 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மோன்தா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் காக்கிநாடாவில், அதிக பாதிப்பைத் தாங்கும் என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 260 நிவாரண மையங்களைத் திறந்துள்ளது. மேலும், நெல்லூரில் 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் அனைத்திலும் அடுத்த 2-3 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ரேஷன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள. காக்கிநாடா மாவட்டத்தின் தயார்நிலை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆந்திர நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி. நாராயணா, நேற்று (அக்டோபர் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
ஒடிசாவில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள சுமார் 32,000 மக்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 1,500 தங்குமிடங்களுக்கு மாற்றப்படவுள்ளனர். மல்கங்கிரி, கோராபுட், நவரங்பூர், ராயகடா, கஜபதி, கஞ்சம், கலாஹண்டி மற்றும் கந்தமால் ஆகிய எட்டு மாவட்டங்களின் நிர்வாகங்கள் நிலைமையைச் சமாளிக்க "அதிக தயார்நிலையில்" வைக்கப்பட்டுள்ளன. இந்த எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் அக்டோபர் 30 வரை மூடப்பட்டிருக்கும்.
கிழக்கு கடற்கரை ரயில்வே, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று இயக்கப்படவிருந்த 32 ரயில்களை ரத்து செய்துள்ளதுடன், மூன்று ரயில்களின் பாதையை மாற்றியமைத்துள்ளது. ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் டி.கே. சிங், மக்களை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், கடலோர காவல்படை அதிகாரிகளின் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது குறித்து மாநில அரசு அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.
அதே போல், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) கரையைக் கடக்க இருப்பதால், தமிழ்நாட்டில் பெரிய அளவில் சேதம் ஏற்படாது என்று கூறினார். அடுத்த 10 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் எங்களுக்குத் தெரிவித்துள்ளது. ஆனால், கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள எங்கள் அரசு தயாராக உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/montha-landfall-near-kakinada-today-alert-in-andhra-odisha-tamil-nadu-as-cyclone-closes-i-10599090





