/indian-express-tamil/media/media_files/2025/10/25/puducherry-2025-10-25-13-51-28.jpg)
Puducherry
புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகை முடிந்து ஒரு வாரமாகியும், புதுச்சேரி அரசு அறிவித்த தீபாவளி தொகுப்பு இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து, லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை முன்னாள் பாஜக நியமன எம்எல்ஏ சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.
திட்டம் அறிவித்தும் தோல்வி கண்ட அரசு
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ சுவாமிநாதன், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, எந்தவொரு திட்டத்தை அறிவித்தாலும் அதில் தோல்வி கண்ட அரசாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
ஏழை எளிய மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, அரசு அறிவித்த தீபாவளித் தொகுப்பு:
சர்க்கரை 2 கிலோ
எண்ணெய் 2 லிட்டர்
கடலைப்பருப்பு 1 கிலோ
ரவை மற்றும் மைதா அரை கிலோ
ஆகியவை தீபாவளி முடிந்து ஒரு வார காலமான பிறகும் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள ஏழை மக்கள் பலர் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாட முடியாமல் ஏமாற்றமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் நலத் திட்டங்களில் தொடர் தோல்வி
தட்டாஞ்சாவடி தொகுதியைத் தவிர்த்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலுமே தீபாவளி தொகுப்பு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய இலவச அரிசியும் இதுவரை வழங்கப்படவில்லை.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/25/whatsapp-image-2025-10-25-13-55-11.jpeg)
தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திலும் இந்த அரசு தோல்வி கண்டுவருவதாகவும், குறிப்பாக லாஸ்பேட்டை தொகுதியை இந்த அரசு புறக்கணித்து வருவதாகவும் சுவாமிநாதன் குற்றம் சாட்டினார்.
எந்தவொரு நலத்திட்டங்களையும் இதுவரை வழங்காத ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள், தீபாவளி தொகுப்பை உடனடியாக வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பி போராட்டம் செய்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/puducherry-diwali-gift-scheme-ration-shop-protest-swaminathan-ex-mla-nr-congress-bjp-alliance-10592269





