மோந்தா' புயல்
/indian-express-tamil/media/media_files/2025/10/26/cyclone-2025-10-26-08-02-37.jpg)
வடகிழக்கு பருவமழையின் 2-வது நிகழ்வாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து பரிந்துரைத்த 'மோந்தா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற இந்த நிகழ்வு இன்று சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே 950 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 960 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. நாளை (திங்கட்கிழமை), தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இது புயலாக மாறும். தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) இது மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் இடம், நேரம்: 'மோந்தா' புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப் புயலாக கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வரை இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள்:
புயல் சின்னத்தின் நகர்வைப் பொறுத்து, தமிழ்நாட்டில் மழைப்பொழிவு இருக்கும். இந்த புயல் சின்னம் சென்னையை ஒட்டி கடந்து ஆந்திராவுக்கு சென்றால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மாறாக, கடலில் விலகிச் சென்றால் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை): திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (திங்கட்கிழமை): ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை): ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பொதுவாக, இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு:
புயல் உருவாக உள்ளதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் இந்த கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.





