வெள்ளி, 24 அக்டோபர், 2025

புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல் ‘கட்டப் பஞ்சாயத்து’ நடத்த முடியாது – மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம்

 

TVK Vijay

மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த சோமசுந்தரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி, “போலீசார் சில புகார்களில் வழக்குப்பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்துவது கட்டப் பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம்” எனக் கடும் கருத்து தெரிவித்தார்.

மனுதாரர் சோமசுந்தரம் தனது மனுவில், “மதுரை தல்லாகுளம் பகுதியில் எல்.கருப்பையா என்பவரிடமிருந்து ஒரு குடியிருப்பு நிலம் வாங்கினேன். தொகையை முழுமையாகச் செலுத்தியபின்னரும் கூடுதல் பணம் கேட்டு, நான் கொடுத்த ஆவணங்களைத் தர மறுக்கின்றனர். மேலும் அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரினார்.

இம்மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “முதற்கட்ட விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மற்றும் மனுதாரர் வழங்கிய துணைப் பொருட்களைப் பார்ப்பது மட்டுமே. ஒரு வெளிப்படையான குற்றம் தென்பட்டால், உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “பிரிவு 173(3)ன் கீழ் எந்தவொரு விசாரணையும் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஒப்புதலுக்குப் பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதன் முடிவும் உரிய அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்” என்றும் நீதிபதி வலியுறுத்தினார். அத்துடன், மனுதாரர் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-high-court-interrogation-without-registering-case-court-order-10588064