புதுச்சேரி மாநிலம் வழியாக அமைக்கப்பட்டு வரும் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், பாகூர் அருகில் சேலியாமேடு கிராமத்தில் புதிதாகச் சுங்கச்சாவடி (Toll Plaza) அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள் மற்றும் காரணங்கள் பின்வருமாறு:
சட்ட விதி மீறல்
இந்திய சுங்கச்சாவடி விதிகள் (National Highways Fee Rules, 2008) மற்றும் சட்டத்தின்படி, அடுத்தடுத்த இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையிலான குறைந்தபட்சத் தூரம் 60 கிலோமீட்டர்கள் இருக்க வேண்டும்.
விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே புதுச்சேரி மாநில எல்லையை ஒட்டியுள்ள கெங்கராம்பாளையம் மற்றும் சிதம்பரம் கொத்தட்டையில் இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சுங்கச்சாவடிகளுக்கும் இடையே சுமார் 70 கி.மீ. தூரம் உள்ளது.
இந்நிலையில், கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், கொத்தட்டை சுங்கச்சாவடியில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும் உள்ள புதுச்சேரி மாநிலம், பாகூர் கொம்யூன் சேலியாமேடு பகுதியில் புதிய சுங்கச்சாவடி அமைப்பது சட்ட விதிகளின்படி நியாயமற்றது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு
நாடு முழுவதும் பல்வேறு சட்ட விரோதமாகச் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் சட்டத்திற்கு விரோதமாகச் சுங்கச்சாவடி அமைக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
பாகூர் அருகில் அமைக்கப்பெறும் சுங்கச்சாவடியால், அப்பகுதி விவசாயிகள், சிறு-குறு தொழில் செய்யும் கிராம மக்கள் என அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
தரமற்ற சாலைகள் குறித்து ஆய்வு செய்யக் கோரிக்கை
மேலும், இந்த புதிய தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு இடங்களில் விரிசல், பாலங்களில் விரிசல், மற்றும் சரிந்து விழுவது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்தச் சாலைகள் பாதுகாப்பானவையாக இல்லை.
எனவே, இந்தச் சாலைகளின் தரமின்மை மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து, உரிய தலையீட்டைச் செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கை மனு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து அளிக்கப்பட்டது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மாநில குழு உறுப்பினர் அ.இளவரசி, பாகூர் கொம்யூன் செயலாளர் ப.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/viluppuram-nagapattinam-national-highway-pakkur-toll-gate-protest-cpim-10566030