பீகார் எஸ்.ஐ.ஆர் முதல் டிஜிட்டல் மோசடி வழக்கு வரை... நீதிபதி சூர்யா காந்த்-ன் முக்கிய தீர்ப்புகள்
/indian-express-tamil/media/media_files/2025/10/27/cji-surya-kant-2025-10-27-14-57-47.jpg)
பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கு முதல் டிஜிட்டல் மோசடி வரை... நீதிபதி சூர்யா காந்த்-ன் முக்கிய தீர்ப்புகள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தனக்குப் பின்வரும் 53-வது இந்தியத் தலைமை நீதிபதியாக (CJI) சூர்யா காந்தை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், நவம்பர் 23 அன்று தலைமை நீதிபதி கவாய் ஓய்வுபெற்ற பிறகு நீதிபதி சூர்யா காந்த் பதவி ஏற்பார். இவர் பிப்ரவரி 9, 2027 வரை அப்பதவியில் நீடிப்பார்.
ஹரியானாவைச் சேர்ந்த நீதிபதி சூர்யா காந்த், ஜனவரி 9, 2004 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற இவர், மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். நாட்டின் உயரிய நீதிமன்றத்தில் இவர் பல முக்கிய தீர்ப்புகளில் பங்களித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய முக்கியப் பணிகள், பொது தளங்களில் அவர் தெரிவித்த முக்கிய கருத்துகளை இங்கே காணலாம்.
பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (Bihar SIR): சட்டசபை தேர்தல் வரவிருக்கும் பீகாரில் வாக்காளர் பட்டியலை தீவிரமாக திருத்துவது தொடர்பான வழக்கை விசாரித்தபோது, பீகாரின் வயது வந்தோரின் எண்ணிக்கையை விட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 107% அதிகமாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி சூர்ய காந்த், தேர்தல் ஆணைய நடவடிக்கை "நியாயமானது" என்றும், "சரியாகச் செய்ய வேண்டிய பிரச்னை" என்றும் குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம், வாக்காளர் பட்டியலை எண்ணுவதற்கு ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையைத் தொடர்ந்து பரிசீலிக்கலாம் என்றும், இதில் ஏதேனும் சட்டவிரோதம் இருந்தால் நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்யலாம் என்றும் அவரது அமர்வு கூறியது.
டிஜிட்டல் மோசடிகள் (Digital scams): நாட்டில் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ (digital arrest) சைபர் கிரைம் வழக்குகளைக் கவனித்த நீதிபதி சூர்ய காந்தின் உச்சநீதிமன்றம், அக்டோபர் 27 அன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவற்றின் அதிகார வரம்புகளில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) விவரங்களைக் கேட்டது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் தாமதம்: தீர்ப்புகளை அறிவிக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் நிலைமை குறித்து ஆகஸ்ட் மாதம் நீதிபதி சூர்யகாந்த் கடுமையான கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நீதிபதிகள் தீர்ப்புகளை எழுதுவதற்காக விடுப்பு எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்த வழக்குகளை முடித்து விடுங்க. மக்களுக்குத் தீர்ப்புகள் தேவை. அவர்களுக்கு நீதித்துறை தத்துவம் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலை இல்லை. நிவாரணம் மறுக்கப்பட்டதா அல்லது அளிக்கப்பட்டதா என்பது குறித்து காரணத்துடன் கூடிய உத்தரவை வழங்குங்கள்," என்று அவர் கூறினார்.
யூடியூபர்கள் வழக்கு: பிரபல யூடியூபர் ரன்வீர் அலகாபாடியாவிற்குப் பாதுகாப்பு அளித்தபோது, அவர் பயன்படுத்திய வார்த்தைகள் "பெற்றோர்களை வெட்கப்பட வைக்கும்," மேலும் அது "முழு சமூகத்தையும்" பாதிக்கும் என்றும், அவர் மற்றும் அவரது "ஆட்கள்" வெளிப்படுத்திய "மனதின் பிறழ்வு மற்றும் வக்கிரம்" என்றும் நீதிபதி சூர்யகாந்த் கடுமையாக விமர்சித்தார். சாமேய் ரெய்னா என்பவரின் 'இந்தியாஸ் காட் லேடண்ட்' என்ற நிகழ்ச்சியில் அலகாபாடியா பேசிய கருத்துகளுக்காக அவர் மற்றும் பிற செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
தேசத்துரோகம் (Sedition): மே 2022-ல், நீதிபதி காந்த் அடங்கிய அமர்வு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124ஏ (தேசத்துரோகம்) விதிகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை, நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து தேசத்துரோக வழக்குகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
பொது மேடைகளில் சூர்ய காந்த் உரைகள்
ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு: சமீபத்தில் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் 'வாழும் அரசியலமைப்பு: இந்திய நீதித்துறை அரசியலமைப்பை வடிவமைத்து பாதுகாப்பது எப்படி' என்ற தலைப்பில் பேசியபோது, நீதிமன்றங்கள் "அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மற்றும் தார்மீகத் தெளிவின் அடிப்படையில், அதிகாரம் அற்றவர்களுக்கு அதிகாரம் அளிக்கச் செயல்படும்போது" ஜனநாயகத்தை "ஆழமாக்குகின்றன" என்று நீதிபதி காந்த் கூறினார்.
நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை: ஜூன் மாதம், சியாட்டில் பல்கலை.யில் பேசியபோது, நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறையை அவர் உறுதியாக ஆதரித்துப் பேசினார். "அதன் குறைபாடுகள் இருந்தபோதிலும்," நீதித்துறையின் சுயாட்சியைப் பாதுகாக்கும் "ஒரு முக்கியமான நிறுவனப் பாதுகாப்பாக" இது செயல்படுகிறது என்றார். இந்த முறையானது "நிர்வாகம் மற்றும் சட்டமன்றத்தின் தலையீட்டைக் கணிசமாகக் கட்டுப்படுத்துகிறது, இதன் மூலம் நீதித்துறையின் சுயாட்சியைப் பாதுகாக்கிறது மற்றும் நீதிபதிகளின் நடுநிலைமையைக் கெடுக்கக்கூடிய புற அழுத்தங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கிறது" என்றும் அவர் கூறினார்.
காலநிலை மாற்றம்: ஜூலை மாதம் ஒரு காலநிலை மாற்ற மாநாட்டில் பேசிய அவர், காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் அதற்கான தீர்வுகளையும் உள்நாட்டுக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யும் போது, சுற்றுச்சூழல் சேதம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பழியை இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகள் மட்டும் சுமக்க வேண்டிய கருத்து அடிக்கடி உருவாக்கப்படுகிறது என்றார். "நிலையான நடைமுறை பொறுத்தவரை, எங்கள் தரப்பில் எந்தவித முன்னேற்றத்திற்கும் இடமில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் தவறு செய்பவர்கள் பெரும்பாலும் கவனத்தில் வராமல் தப்பிவிடுகிறார்கள்," என்றும் அவர் மேலும் கூறினார்.
நீதி அமைப்பில் தொழில்நுட்பம்: ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்வில் பேசிய நீதிபதி காந்த், நீதி அமைப்பில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க தொழில்நுட்பத்தைப் "பயனுள்ள மற்றும் உள்ளடக்கிய முறையில்" பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இருப்பினும், அது மனிதத் தன்மையை மாற்ற முடியாது என்றும், "நீதியின் இதயம் மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும்" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நீதிபதி சூர்யா காந்த் பற்றிய குறிப்புகள்
ஜூலை 7, 2000 அன்று ஹரியானாவின் மிக இளைய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட பெருமையை இவர் பெற்றார். அதைத் தொடர்ந்து, மார்ச் 2001-ல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜனவரி 9, 2004 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக உயர்த்தப்படும் வரை அவர் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) ஆளும் குழுவில் பிப்ரவரி 23, 2007 அன்று இவர் உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார், மேலும் பிப்ரவரி 22, 2011 வரை தொடர்ந்து 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார். தற்போது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் கீழ் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமான இந்திய சட்ட நிறுவனத்தின் பல்வேறு குழுக்களில் அவர் உறுப்பினராக உள்ளார். நவம்பர் 12, 2024 முதல் அவர் உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.





