/indian-express-tamil/media/media_files/2025/10/23/tn-government-takes-possession-of-srm-hotel-in-trichy-tamil-news-2025-10-23-19-33-42.jpg)
30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தி உள்ளது.
திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெற்ற எஸ்.ஆர்.எம் குழுமம், அங்கு 100 அறைகள், நீச்சல் குளம், மதுக்கூடத்துடன் இணைந்த சொகுசு விடுதியை (ஹோட்டல்) 1994-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தது. தொடக்கத்தில் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வீதம் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரால் சந்தை மதிப்பு அடிப்படையில் ஆண்டு குத்தகை தொகையை 7 சதவீதம் உயர்த்தி நிர்ணயம் செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், குத்தகை காலம் 2024 ஜூன் 13-ம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஹோட்டலை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு ‘விடுதியின் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. எனவே, குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்ய சொல்லி பலமுறை வலியுறுத்தியும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காலி செய்ய வற்புறுத்திகின்றனர்’ என்று எஸ்ஆர்எம் குழுமத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, ரூ.38.50 கோடி பாக்கித் தொகையை கட்ட மறுப்பதாக சுற்றுலாத் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விடுதியை காலி செய்ய சுற்றுலாத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தடையாணை பெற்ற எஸ்.ஆர்.எம் குழுமம், தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முதலில் ரூ.38.50 கோடி பாக்கித் தொகையை கட்டுங்கள் என்று காலக்கெடுவுடன் உத்தரவிட்டது. ஆனால், பாக்கித் தொகை கட்டப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வர்த்தக மேலாளர் வெங்கடேசன், மண்டல மேலாளர் பிரபுதாஸ், திருச்சி கோட்டாட்சியர் அருள், கிழக்கு தாசில்தார் விக்னேஷ் மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் நேற்று எஸ்.ஆர்.எம் ஹோட்டலுக்கு சென்று, அதை கையகப் படுத்தினர். ஆனால், ஹோட்டலை கையகப்படுத்தியது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட எஸ்ஆர்எம் ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-takes-possession-of-srm-hotel-in-trichy-tamil-news-10587703





