/indian-express-tamil/media/media_files/2025/10/09/trump-gaza-peace-plan-2025-10-09-11-30-41.jpg)
Trump announces Israel and Hamas have signed off on ‘first phase’ of Gaza peace plan
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காசா மண்ணில் லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, குறிப்பாக 18,500-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகளைக் காவு வாங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (வியாழக்கிழமை) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்!
பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர்!
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
"நமது அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! இதன்படி, அனைத்துப் பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மேலும், வலுவான, நீடித்த மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் அமைதிக்கான முதல் படியாக, இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு எல்லைக் கோட்டுக்கு வாபஸ் பெறும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
முக்கியப் பேச்சுவார்த்தை:
பிணைக் கைதிகள் விடுவிப்பு மற்றும் இஸ்ரேல் படைகள் விலகல் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் பெருமிதம்:
வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ அளித்த உடனடிச் செய்தியின் அடிப்படையிலேயே டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், "அரபு மற்றும் முஸ்லிம் உலகம், இஸ்ரேல், சுற்றியுள்ள நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய அனைவருக்கும் இது ஒரு மகத்தான நாள்! இந்த வரலாற்று மற்றும் முன்னெப்போதும் இல்லாத நிகழ்வை நிகழ்த்துவதற்கு எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்," என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பும், இந்த உடன்பாடு காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும், ஆக்கிரமிப்புப் படைகள் விலகுவதையும், மனிதாபிமான உதவிகள் நுழைவதையும், சிறைக் கைதிகள் பரிமாற்றத்தையும் இது உறுதி செய்யும் என்றும் அறிவித்துள்ளது.
இரண்டு வருடப் போரில் பெரும் துயரத்தைச் சந்தித்த காசா மக்களுக்கு, இந்த ஒப்பந்தம் ஒரு புதிய விடியலைக் கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
source https://tamil.indianexpress.com/international/trump-gaza-peace-plan-israel-hamas-agreement-gaza-ceasefire-hostage-release-deal-israel-troop-withdrawal-10543866