/indian-express-tamil/media/media_files/2025/10/10/supreme-court-5-2025-10-10-06-37-16.jpg)
மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதி பதவிக்கான தகுதியை விண்ணப்பிக்கும் நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமர்வு கூறியுள்ளது.
ஒரு நீதித்துறை அதிகாரி, நீதித்துறை அதிகாரியாகவும் மற்றும் வழக்கறிஞராகவும் 7 ஆண்டுகள் அனுபவம் இருந்தால், அவர் மாவட்ட நீதிபதி பணிக்கு நேரடியாக விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதன் மூலம், 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட தனது முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 2 தனித்தனி, ஆனால் ஒரே மாதிரியாக தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்தின் 1984-ம் ஆண்டு வழக்குகளான சத்ய நாராயண் சிங் எதிர் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் 2020-ம் ஆண்டு வழக்கான தீராஜ் மோர் எதிர் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகள் "சரியான சட்டக் கோட்பாட்டை வழங்கவில்லை" என்று கூறியது.
தலைமை நீதிபதி கவாய், தான் மற்றும் நீதிபதிகள் அரவிந்த் குமார், எஸ்.சி. சர்மா, கே. வினோத் சந்திரன் ஆகியோருக்காக எழுதிய தீர்ப்பில், “ஏற்கனவே பணியில் இருக்கும் ஒருவர், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டால், கீழமை நீதிமன்றங்களில் உள்ள மற்ற அனைத்து மூத்தவர்களின் கோரிக்கைகளும் கவனிக்கப்படாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16 வது பிரிவுகளை மீறும் என்ற சத்ய நாராயண் சிங் வழக்கில் உள்ள கருத்துக்கள் சரியல்ல” என்று கூறினார். மற்றொரு தீர்ப்பை நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் வழங்கினார்.
'சம வாய்ப்பை மறுப்பதற்கு வழிவகுக்கும்'
“மாறாக, இது நீதித்துறை அதிகாரிகளில் அதிகத் தகுதியுள்ளவர்கள் வழக்கறிஞர்களுடன் போட்டியிட உதவும், மேலும், அவர்கள் அதிகத் தகுதி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள் என்று நாங்கள் காண்கிறோம். அதுமட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16 வது பிரிவுகள் அனைத்துத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றன. உண்மையில், மாவட்ட நீதிபதி பணிக்கான நேரடி ஆட்சேர்ப்பில், 7 ஆண்டுகள் பயிற்சி அனுபவம் கொண்ட வழக்கறிஞர்களுக்கு ஒரு 'ஒதுக்கீட்டை' உருவாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்ட கருத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16 வது பிரிவுகளை மீறுவதாக அமையும்."
“எனவே, தகுதியுள்ள ஒரு நபர் விளம்பரம் வெளியான நேரத்தில் மத்திய அல்லது மாநில நீதித்துறை பணியில் இருந்தால், அவரை, 7 ஆண்டுகள் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்களுடன் நேரடி ஆட்சேர்ப்புப் பிரிவில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பது சமமாக நடத்த மறுப்பதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் காண்கிறோம். நியமனங்கள் திறமையின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும்போது, தகுதியுள்ள நீதித்துறை அதிகாரிகளின் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் இருக்க முடியாது. திறமை, திறமை மட்டுமே முக்கியம்." என்று கூறினார்.
2020-ம் ஆண்டு தீராஜ் மோர் வழக்கில் கொடுக்கப்பட்ட முடிவைக் குறிப்பிட்ட நீதிமன்றம், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 233-ஐ (மாவட்ட நீதிபதிகளின் நியமனம் பற்றியது) விளக்கும்போது, பணியில் உள்ள விண்ண்ப்பதாரர்களுக்கு மாவட்ட நீதிபதி பதவிக்கான ஒரே வழி பதவி உயர்வு மட்டுமே என்று கூறியிருந்தது என்றது.
“சத்ய நாராயண் சிங் வழக்குகள் முதல் தீராஜ் மோர் வழக்குகள் வரை நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்டால், அரசியலமைப்புச் சட்டத்தின் 2330-வது பிரிவின் (2)-ம் உட்பிரிவின் முதல் பகுதி பயனற்றதாகிவிடும்" என்றும் அரசியலமைப்புச் சாசன அமர்வு மேலும் கூறியது.
“மாவட்ட நீதிபதிகள் பிரிவில் திறமையை மேம்படுத்த, இளம், திறமையான, தகுதிவாய்ந்த நீதித்துறை அதிகாரிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது” என்று இந்த அமர்வு கூறியது. “நீதித்துறை அதிகாரிகள் நீதிபதிகளாகப் பணிபுரியும் போது பெறும் அனுபவம், வழக்கறிஞராகப் பணிபுரியும் ஒருவர் பெறும் அனுபவத்தை விட மிக அதிகம். அதுமட்டுமின்றி, நீதித்துறை அதிகாரிகளாக தங்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, நீதிபதிகளுக்குக் குறைந்தது ஒரு வருட கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது.”
மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதி பதவிக்கான தகுதியை விண்ணப்பிக்கும் நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அமர்வு கூறியது. “அனைவருக்கும் சமமான களம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக” வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இருவருக்கும் மாவட்ட நீதிபதி / கூடுதல் மாவட்ட நீதிபதியாகக் கருதப்பட்டு நியமிக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வயது விண்ணப்ப தேதியில் 35 ஆண்டுகள் என்று இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
“இதன் விளைவாக, மேற்கண்ட பதில்களுக்கு இணங்காத, உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட அத்தகைய அனைத்து விதிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அனைத்து மாநில அரசுகளும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இன்று முதல் மூன்று மாதங்களுக்குள் நாங்கள் இங்கே கூறியுள்ளவற்றுக்கு இணங்க விதிகளை உருவாக்க/திருத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/supreme-court-opens-district-judge-posts-to-judicial-officers-with-7-years-experience-10546791





