வயர்லஸ் இணைய பயன்பாட்டாளர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 54,917 மில்லியன் ஜிபி டேட்டாவை பயன்படுத்தியுள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது.
இது குறித்து ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014ம் ஆண்டு 828 மில்லியன் ஜிபி வயர்லஸ் டேட்டா பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த அளவானது 2018ம் ஆண்டில் 46,404 மில்லியன் ஜிபி டேட்டாவை இணைய பயன்பாட்டாளர்கள் உபயோகித்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலாக, இந்த ஆண்டின் செப்டம்பர்மாதம் வரையிலான காலாண்டில் டேட்டா பயன்படுத்தும் அளவானது 54,917 ஜிபியாக உயர்ந்திருக்கிறது என்றும், இந்த அளவானது இந்த ஆண்டின் இறுதிக்குள் கணிசமான அளவு அதிகரிக்கும் என்று ட்ராய் தெரிவித்துள்ளது.
வயர்லஸ் இணைய சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2014ம் ஆண்டின் இறுதியில் 281.58 மில்லியனாக இருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி 664.80 மில்லியனாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர் உயர்வு விகிதம் ஆண்டுக்கு 36.36 சதவீதமாக இருப்பதாக ட்ராய் தெரிவித்துள்ளது. மேலும், 2018ம் ஆண்டில் 46,406 மில்லியன் ஜிபி டேட்டாவும், 2017ம் ஆண்டில் 20,092 மில்லியன் ஜிபி டேட்டாவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தகுந்த விசயம் என்னவெனில், 2016ம் ஆண்டு டேட்டா பயன்பாடு 4642 மில்லியன் ஜிபியாக இருந்த நிலையில், 2017ம் ஆண்டு 20,092 மில்லியன் ஜிபியாக உயர்ந்திருப்பது தான்.
கடந்த 4 ஆண்டுகளில் இணையத்தை பொழுதுபோக்கு மற்றும் தொலைதொடர்பு பயன்பாட்டிற்காக பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பதாக கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். எல்டிஇ மற்றும் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி அதை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியதால் டேட்டா பயன்பாடு பெருமளவு உயர்ந்திருக்கிறது என்றும், டேட்டா பயன்பாடு வருங்காலங்களில் பெரிய அளவிற்கு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்களிடையே அதிகரித்த ஸ்மார்ட் போன் பயன்பாடு, தொலைதொடர்பு நிறுவனங்கள் 2ஜி தொழில்நுட்பத்திலிருந்து 4ஜி தொழில்நுட்பத்திற்கு குறுகிய காலத்தில் மாறியது மற்றும் குறைந்த விலையிலான டேட்டா கட்டணம் ஆகியவையே டேட்டா பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய பயன்பாடு பல லட்சகணக்கான பயனாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இணையத்தின் வழியாக அரசின் சேவைகள், நேரடி தகவல்கள், இணைய சந்தைகள் மற்றும் சமூகவலைதளங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த வளர்ச்சியானது மக்களின் வேலையை எளிதாக்கி, வாழ்வாதாரத்தில் நிச்சயம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவல்லுநர்கள் கருதுகின்றனர்.
credit ns7.tv