சனி, 20 ஜூன், 2020

சீன பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்த மின்வணிக கொள்கையில் மாற்றம்?

சீன பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், மின் வணிக நிறுவனங்களுக்கான கொள்கைகளில் மத்திய அரசு மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கருத்து மேலோங்கியுள்ளது.  இதையடுத்து இணையவழி வணிக கொள்கை விதிகளில் சில மாற்றங்கள் செய்ய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்துக் கூறிய அமைச்சக அதிகாரி ஒருவர், மின்வணிக விற்பனைப் பொருளானது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா என்பதை தெளிவாக காட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்றார். இதனை தீவிரமாக கண்காணிப்போம். இது சீன பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் என்றார். 

 

இது ஒரு சோதனைக்களம் போல் இருக்கும். இந்திய தயாரிப்பு பொருட்களை வாங்குவதை நுகர்வோர் முடிவு செய்யலாம். இந்த புதிய கொள்கை விரைவில் மக்களின் கருத்துக் கேட்புக்கு முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து கருத்துத் தெரிவித்த மின்வணிக வல்லுநர் ஒருவர், மக்களின் இன்றைய உணர்வுகளுக்கும், மத்திய அரசின் சுயசார்பு திட்டத்திற்கும் ஏற்ற வகையில் இந்த புதிய கொள்கை இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தாங்கள் வாங்கும் பொருள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். 


கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகம் சுமார் 47 பில்லியன் டாலர் மிகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.