வியாழன், 1 ஜனவரி, 2026

டன் கணக்கில் குவிக்கப்பட்ட கோல்ட்; இந்த நாடு தான் முதலிடம்

 1 01 2026

gold

தங்கம் உலகின் நீடித்த சேமிப்புகளில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது. மத்திய வங்கிகள் தங்கத்தை சாதனை அளவில் தொடர்ந்து குவித்து வருவதால் 2025-ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் என்ற வராறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தை அதிக அளவு கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜெர்மனி, 3-வது இடத்தில் இத்தாலி மற்றும் 8-வது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா 8,133.5 டன் தங்கத்தை பாதுகாத்து வைத்துள்ளது. இதன் மூலம் அந்நாடு உலகில் மிக அதிக அளவு தங்கத்தை வைத்திருக்கும் நாடாக முன்னிலையில் தொடர்ந்து உள்ளது. இந்த வரிசையில் பல தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க மாற்றமின்றி நிலைத்திருக்கிறது. இதில் பெரும்பாலான தங்கம் ஃபோர்ட் நாக்ஸ் (Fort Knox) மற்றும் நியூயார்க் மத்திய வங்கி (Federal Reserve Bank of New York) ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.
தற்போதைய தங்க விலைகளின் அடிப்படையில், அமெரிக்காவின் இந்த தங்க கையிருப்பின் மதிப்பு $1 டிரில்லியனைக் கடந்துள்ளது. இது அமெரிக்க டாலரின் மீது உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான மூலோபாய சொத்தாக செயல்படுகிறது.

மற்ற நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு

ஐரோப்பாவின் முக்கிய பொருளாதார நாடுகளான ஜெர்மனி (3,352 டன்), இத்தாலி (2,452 டன்) மற்றும் பிரான்ஸ் (2,437 டன்) ஆகியவை ஒன்றிணைந்து சுமார் 8,200 டன் தங்கத்தை வைத்துள்ளன. இது அமெரிக்காவின் மொத்த தங்க கையிருப்புக்கு நிகராக உள்ளது. 

சீனாவின் தங்க கையிருப்பு 2019-ஆம் ஆண்டில் 1,948 டன்களிலிருந்து 2024-ஆம் ஆண்டில் 2,280 டன்களாக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இது அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்களில் இருந்து விலகி யுவானை சர்வதேச அளவில் வலுப்படுத்தும் நோக்கில் பீஜிங் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.

தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா 876 டன் தங்கத்தை கையிருப்பாக வைத்துள்ளது. இதர வளர்ந்து வரும் சந்தைகளான துருக்கி (595 டன்) மற்றும் போலந்து (448 டன்) போன்ற நாடுகளும், பணவீக்கம், நாணய மாற்றம் தொடர்பான அதிர்வுகள் மற்றும் புவியியல் அரசியல் நிச்சயமற்ற நிலைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தங்களின் தங்க கையிருப்புகளை கணிசமாக அதிகரித்துள்ளன.

நாடுகளின் தங்க பட்டியல்

அமெரிக்கா - 8,133.5

ஜெர்மனி - 3,351.6

இத்தாலி - 2,451.9

பிரான்ஸ் - 2,437.0

ரஷ்யா - 2,331.1

சீனா - 2,279.6

சுவிட்சர்லாந்து - 1039.9

இந்தியா - 876.2

ஜப்பான் - 846.0

நெதர்லாந்து - 612.5

துருக்கி - 595.4

போலாந்து - 448.2

போர்ச்சுக்கல் - 382.7

உஸ்பெகிஸ்தான் - 382.6

சவுதி அரேபியா - 323.1



source https://tamil.indianexpress.com/international/which-country-hold-the-most-gold-reserves-read-full-story-10961223