ஞாயிறு, 4 ஜனவரி, 2026

ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை: ஸ்டாலினின் அதிரடித் திட்டம்

 

stalin (2)

ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை: ஸ்டாலினின் அதிரடித் திட்டம்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.கவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் புரட்சிகரமான மாற்றத்தை முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சிந்தனையோடு, மக்களின் கருத்துக்களை நேரடியாகப் பெற்று ‘திராவிட மாடல் 2.0’ அரசுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க தி.மு.க திட்டமிட்டுள்ளது.

ஏ.ஐ மூலம் கருத்து தெரிவிப்பது எப்படி?

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்கள் tnmanifesto.ai என்ற பிரத்யேக இணையதளத்திற்கு சென்று தமிழ் அல்லது ஆங்கில மொழியைத் தேர்வு செய்யலாம். டைப்பிங் செய்யத் தெரியாதவர்கள், வசதி இல்லாதவர்கள், தங்களது கருத்துக்களைத் தமிழ், ஆங்கிலம் அல்லது 2 மொழிகளிலும் கலந்து குரல் பதிவாக வழங்கலாம். அதனை ஏ.ஐ. துல்லியமாக உள்வாங்கிக் கொள்ளும். பெரிய அமைப்புகள் அல்லது குழுக்கள் தங்களது கோரிக்கை பட்டியலை PDF வடிவிலோ அல்லது கையால் எழுதி புகைப்படம் எடுத்தோ பதிவேற்றலாம். ஏ.ஐ. அதனை ஸ்கேன் செய்து முக்கிய அம்சங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும்.

தொடர்பு கொள்ள வேண்டிய பிற வழிகள்

ஏ.ஐ. வெப்சைட் மட்டுமின்றி, மக்கள் கீழ்க்கண்ட வழிகளிலும் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொலைபேசி: 08069446900

வாட்ஸ் அப் (WhatsApp): 9384001724

மின்னஞ்சல்: dmkmanifesto2026@dmk.in

இணையதளம்: www.dmk.in/ta/manifesto2026

2021 தேர்தல் வாக்குறுதிகளின் நிலை என்ன?

கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், இதுவரை 404 வாக்குறுதிகள் (80%) நிறைவேற்றப்பட்டுள்ளன. 364 வாக்குறுதிகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 37 வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன. உள்ளூர் போராட்டங்கள் மற்றும் தேவைப்படாத சூழல் காரணமாக 64 திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்படாத அரிய திட்டங்கள்

தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாமலேயே பல்வேறு முன்னோடித் திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திறனறித் தேர்வுத் திட்டம். மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் (நம்மைக் காக்கும் 48), கலைஞரின் கனவு இல்லம், மற்றும் மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்தால் முத்திரை கட்டணத்தில் 1% சலுகை.

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 12 பேர் கொண்ட குழு, தமிழகம் முழுவதும் பயணம் செய்து விவசாயிகளையும், தொழிலாளர்களையும், இளைஞர்களையும் நேரில் சந்தித்துப் பரிந்துரைகளைப் பெற உள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/worlds-first-ai-driven-election-manifesto-cm-mk-stalin-launches-tnmanifestoai-for-public-feedback-10971201