/indian-express-tamil/media/media_files/2025/12/29/manickam-tagore-2025-12-29-21-53-39.jpg)
ஆர்.எஸ்.எஸ். வெறுப்புவாத அமைப்பு: அல்கொய்தாவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் சர்ச்சை பேச்சு
பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்டமைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் பாராட்டிய நிலையில், அதற்கு அக்கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிறுவன தின விழாவில் பேசிய மாணிக்கம் தாகூர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். ஆர்எஸ்எஸ் என்பது வெறுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்பு. அது வெறுப்பையே பரப்புகிறது. வெறுப்பிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. அல்கொய்தா போன்ற அமைப்புகளிடமிருந்து நாம் எதையாவது கற்க முடியுமா? அதுவும் வெறுப்பைத் தூண்டும் அமைப்புதான். எதாவது கற்க வேண்டும் என்றால் நல்லவர்களிடமிருந்து கற்க வேண்டும் என்றார்.
140 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸ், மக்களை ஒன்றிணைக்கும் இயக்கம். மகாத்மா காந்தி இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். இத்தகைய இயக்கம் ஒரு வெறுப்புவாத அமைப்பைப் பார்த்து பாடம் கற்க வேண்டுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மாணிக்கம் தாகூர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கடுமையாகச் சாடினாலும், திக்விஜய சிங்கின் கருத்துக்கு திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சியின் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். திக்விஜய சிங் முன்னதாக பேசுகையில், சாதாரண தொண்டராக இருந்து நரேந்திர மோடி பிரதமராக உயர்ந்ததற்கு அந்த அமைப்பின் கட்டமைப்பே காரணம் என்றும், காங்கிரஸிலும் அதிகாரப் பரவல் மற்றும் கட்டமைப்பு மாற்றம் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் திக்விஜய சிங்கின் கருத்து குறித்து இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இது கட்சியின் உள்விவகாரம் என்றும், இதனை ஊடகங்களும் பாஜகவும் பெரிதுபடுத்துவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல தசாப்தங்களாக கல்வி, பேரிடர் நிவாரணம், ரத்த தான முகாம்கள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறது. தேசியவாத அமைப்புகளை இழிவுபடுத்துவது காங்கிரஸின் வாடிக்கையாகிவிட்டது. 26/11 மும்பை தாக்குதலை ஆர்.எஸ்.எஸ். சதி என்று சொன்னவர் திக்விஜய சிங். பாகிஸ்தானின் அஜெண்டாவும் காங்கிரஸின் அஜெண்டாவும் ஒன்றாகவே இருக்கிறது என்று அவர் சாடினார்.
source https://tamil.indianexpress.com/india/day-after-digvijaya-singh-manickam-tagore-fuels-row-rss-built-on-hatred-can-you-learn-anything-from-al-qaeda-10956732





