ஐந்து ஆண்டுகளாக ஜனவரியில் அதிரடி மழை; தமிழ்நாடு காலநிலையில் ஏற்படும் மாற்றமா? - வானிலை ஆய்வு மையம் 6 1 2026
/indian-express-tamil/media/media_files/2026/01/06/download-2026-01-06t071-2026-01-06-07-17-02.jpg)
கடந்த ஐந்து ஆண்டுகளாக எல் நினோ, லா நினா அல்லது நியூட்ரல் நிலை என்ற வேறுபாடின்றி, ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிக மழை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. காலநிலை அடிப்படையில் ஜனவரி என்பது தமிழ்நாட்டுக்கு மிகவும் பலவீனமான மழை மாதமாக கருதப்படுகிறது. மாநிலத்தின் நீண்டகால சராசரி மழையளவு வெறும் 12.3 மி.மீ மட்டுமே. ஆனால் இந்த ஆண்டிலேயே (2026) ஜனவரி 1 முதல் 5 வரை 7.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஜனவரி 9/10 முதல் 13/14 வரை மேலும் ஒரு மழைச் சுற்று (spell) எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஆண்டும் ஜனவரி மாதம் ‘அதிக மழை’ பிரிவில் முடிவடையும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் ஜனவரி மழை போக்கு தொடரும் என கூறப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் 139.3 மி.மீ மழை பதிவாகி ‘சூப்பர் எக்சஸ்’ நிலையை எட்டியது. 2022ல் 34.8 மி.மீ (அதிக மழை), 2023ல் மட்டும் 5.1 மி.மீ (குறைந்த மழை), 2024ல் 50.5 மி.மீ (மிக அதிக மழை), 2025ல் 24.3 மி.மீ (அதிக மழை) என பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் மாதம் முழுமையடையாத நிலையிலேயே குறிப்பிடத்தக்க அளவு மழை கிடைத்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
சென்னை நகரத்தைப் பொறுத்தவரை, ஜனவரி மாதம் பாரம்பரியமாகவே மழை குறைவான மாதமாகக் கருதப்படுகிறது. சென்னை நகரத்தின் ஜனவரி மாத சராசரி மழையளவு 16.2 மி.மீ மட்டுமே. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் ஜனவரி மாதம் அதிக அல்லது மிக அதிக மழையுடன் முடிவடைந்துள்ளது. குறிப்பாக 2021ல் 166.2 மி.மீ மற்றும் 2022ல் 90.3 மி.மீ மழை பதிவாகி, ‘சூப்பர் எக்சஸ்’ மற்றும் ‘ஹியூஜ் எக்சஸ்’ நிலைகளை சென்னை கண்டது. 2024 மற்றும் 2025 ஆண்டுகளிலும் சராசரியை விட அதிக மழை பதிவானது. இந்த ஆண்டில், புத்தாண்டு மழை காரணமாகவே ஜனவரி 5ஆம் தேதிக்குள் 30 மி.மீ மழை பதிவாகி, சென்னை ஏற்கனவே அதிக மழை பிரிவில் உள்ளது. 10–12 ஜனவரி இடையே மேலும் ஒரு மழைச் சுற்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஆண்டும் சென்னை ஜனவரி மாதம் மிக அதிக மழையுடன் முடிவடையும் சாத்தியம் உள்ளது.
விவசாயிகளைப் பொறுத்தவரை, இந்த மழைச் சுற்று முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால், அதேபோல் கடலூர் மாவட்டம் ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாட்டின் பிற பகுதிகள், புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம்–திருவள்ளூர்–சென்னை–செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்கள், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் 4 நாட்கள் நீடிக்கும் இந்த மழை காலத்தில் குறைந்தபட்சம் 1 அல்லது 2 நாட்கள் மழை பெய்யக்கூடும். கொங்கு மண்டலத்திலும் மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பாதுகாப்பு கருதி ஜனவரி 9ஆம் தேதிக்கு முன்னதாகவே அறுவடையை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மழையின் தீவிரத்தைப் பொருத்தவரை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பரவலான கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். வட தமிழ்நாட்டின் பிற பகுதிகள், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட KTCC மாவட்டங்கள், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் இடையிடையே தனித்தனியாக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இதன் தாக்கம் அண்டை நாடான இலங்கையிலும் காணப்படும். இலங்கையின் பல பகுதிகளில் மழை கிடைக்கும் என்றாலும், அது ‘டிட்வா’ (Ditwah) போன்ற மிகப்பெரிய மழை நிகழ்வாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மழை தனித்தனி இடங்களில் மட்டுமே கனமாக இருக்கும் என்பதால், பெரிய அளவிலான நீரோட்டம் அல்லது வெள்ள அபாயம் குறைவாக இருக்கும். ஆனால் இலங்கையின் மிக வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் கனமானது முதல் மிக மிக கனமான மழை வரை பெய்யக்கூடும். காற்று ஒருங்கிணைப்பு (wind convergence) அந்த பகுதிகளில் துல்லியமாக அமையும் நிலையில் இருப்பதால், அந்த பகுதிகள் மட்டும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





