புதன், 4 டிசம்பர், 2013

தூக்கமின்மை





                                              டாக்டர் ஜி. ஜான்சன்
          குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம்.
           இதில் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் போனால் கெடுதி இல்லை.
          ஆனால் தொடர்ந்து சரியான தூக்கம் இல்லையேல் அது மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும்.
           மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற தூக்கப் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் இரு மடங்கினர் அடங்குவர்.நாம் தூங்கும் முறை வயதைப் பொறுத்து அமைவதால் பெரும்பாலும் முதிர் வயதுடையோரிடையே தூக்கப் பிரச்னை அதிகம் காணலாம்.

தூக்கமின்மையை ( insomnia ) துயிலொழி நோய் என்றும் கூறுவார். நாம் தூக்கமின்மை என்றே அழைப்போம்.

தூக்கமின்மை மூன்று வகைப்படும்

* தற்காலிக தூக்கமின்மை ( Transient insomnia ) பிரயாணம், புது இடம் போன்றவற்றால் தூக்கமின்மை உண்டாவது. இது சில இரவுகளே நீடிக்கும்.

* குறுகிய கால தூக்கமின்மை ( Short – term insomnia ) கவலை, மனவுளைச்சல் போன்றவற்றால் உண்டாகும் தூக்கமின்மை அது குறைந்ததும் தானாக விலகி விடும்.

* நீண்ட கால தூக்கமின்மை ( Chronic insomnia ) இதுவே சிக்கலான குறைபாடு. இதனால் பிரச்னைக்குரிய பின் விளைவுகள் உண்டாகும். இதனால் உடலின் எதிர்ப்புச் சக்தி ( Immune system ) பாதிப்புக்கு உள்ளாகி பலவித நோய்கள் தோன்றவும் வழிகோலும்.

இவை தவிர ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராமல் பகலில் கட்டுப்படுத்த முடியாத வகையில் தூக்கம் வரும் . இதை துயில் மயக்க நோய் ( Narcolepsy ) என்று அழைப்பதுண்டு. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதும், வேலை செய்துகொண்டிருக்கும்போதும் , வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதும் தூங்கி வழிவர்!

தூக்கமின்மைக்கான காரணங்கள்

உடல் நோய்கள், மன உளைச்சல், கடுமையான வலி, அதிகமான அளவில் காப்பி, தேநீர் அருந்துவது , தவறான தூங்கும் பழக்கம், பகலில் தூங்குவது போன்றவை தூக்கமின்மையை உண்டுபண்ணலாம். மதுவுக்கும், போதை மருந்துகளுக்கும் அடிமையானாலும் கூட தூக்கம் இல்லாமல் போகும்.

மனோவீயல் காரணங்களால்தான் தூக்கமின்மையால் அவதியுறுவோரின் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர்கள் பாதிக்கப்படுகின்றனர். மண வாழ்க்கையில் பிரச்னை, நீண்ட காலம் நோயுற்ற குழந்தை, செய்யும் வேலையில் திருப்தியின்மை போன்றவை தூக்கத்தைப் பாதிக்கலாம்.

மனச் சோர்வு ( depression ) , பரபரப்பு ( anxiety ) , உளச் சிதைவு ( schizophrenia ) போன்ற மன நோய் உள்ளவர்கள் தூக்கமின்மையால் அவதியுறுவார்கள்.

இருதயம், நுரையீரல்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம், வயிறு , குடல் போன்ற உறுப்புகளில் வியாதி ஏற்பட்டால் தூக்கம் பாதிக்கப்படும்.

பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோன பின்பு ( menopause ) ஏற்படும் வெப்ப உணர்வூட்டம் ( hot flush ) , அதிக வியர்வை காரணமாக தூக்கம் கெடும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இரவில் இரத்தத்தில் இனிப்பின் அளவு குறைந்தால் ( hypoglycaemia ) தூக்கம் கெடும்.

நீண்ட விமானப் பயணத்தின் பின் உண்டாகும் களைப்பு ( jet -lag ), உடல் நேரங்களின் மாற்றங்களுக்கு தடுமாறுவதால் உண்டாவதாகும். இதனாலும் தூக்கம் கெடும்.

வேலை நேரங்களில் மாற்றம் உண்டானாலும் தூக்கம் கெடும். பகல் வேலை பார்த்தவர் இரவு வேலைக்குச் செல்லும்போதும், இரவு வேலை பார்த்துவிட்டு பகல் வேலைக்கு மாறும்போதும் தூக்கம் கெடும்.

         சிகிச்சை முறைகள்
            தூக்கமின்மைக்கு இத்தனை காரணங்கள் உள்ளபோது, அவற்றில் நீங்கள் எதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து சிகிச்சைப் பெறவேண்டும். ஒரு வேளை தனிமை காரணமான மன அழுத்தம் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
          தற்காலிக தூக்கமின்மைக்கு சிகிச்சை தேவை இல்லை. சிறிது நாட்கள் சென்றபின்பு புதிய சூழ்நிலைக்கு பழக்கப்பட்டபின் பழைய நிலைக்கு திரும்பிய பின்பு இயல்பான தூக்கம் வரும்.

குறுகிய கால தூக்கமின்மையும் அவ்வாறே அந்தக் காரணிகள் விலகிய பின்பு தூக்கம் வந்துவிடும். வேண்டுமானால் ஒரு சில நாட்கள் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு பார்க்கலாம்.

ஆனால் நீண்ட கால தூக்மின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக மருத்துவரையும், தேவைப்பட்டால் மனோவீயல் சிறப்பு நிபுணரையும் பார்த்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதே நல்லது.

          தூக்க மாத்திரைகள்

தூக்க மாத்திரைகளை எப்போதுமே மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்தவேண்டும். சொந்தமாக பார்மசியில் வாங்கி உட்கொள்வது நல்லதல்ல. காரணம் அதன் பக்க விளைவுகளும், அதற்கு எளிதில் அடிமையாகும் ஆபத்துமாகும். அதோடு இரவில் மது அருந்துவோர் தூக்க மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. இரண்டும் சேர்ந்து ஆபத்தான பின்விளைவுகளை உண்டு பண்ணிவிடும்.

  நல்ல தூக்கத்துக்கு சில குறிப்புகள்

* தூக்கம் வரும்போது படுத்துவிடவும்.

* காலையில் ஒரே நேரத்தில் தினமும் எழுந்துவிடவும்.

* படுக்கச் செல்லுமுன் முடிந்தால் வெந்நீரில் குளிக்கவும்.

* படுக்குமுன் ஒரு ஆப்பிள் பழம் அல்லது ஒரு துண்டு ரொட்டி சாப்பிடலாம்.

* படுக்குமுன் பத்து நிமிடங்கள் படிக்கலாம்.

* காலையில் அல்லது மாலையில் மட்டுமே உடற்பயிற்சி செய்யவும். இரவில் வேண்டாம்.

* படுப்பதற்கு முன் சில மணி நேரங்கள் வரை மது அல்லது காப்பி, தேநீர் அருந்த வேண்டாம்.

* படுக்கை அறையை இருட்டாகவும், சத்தம் இல்லாமலும், காற்றோட்டமாகவும் வைத்திருக்கவும்.

* படுக்குமுன் நம்முடைய உணர்வுகளைத் தூண்டக்கூடிய படங்களையோ, நிகழ்ச்சிகளையோ தொலைக்காட்சியில் காண வேண்டாம்.