ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்



 டாக்டர் ஜி. ஜான்சன்

அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற்றி மரணம் நேரிடும். இதை குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை. இவர்கள் தாங்கள் யார் என்பதை மறந்து செயல்படுவதால், உறவினர்களுக்கு பெரும் துன்பம் நேரிடும்.

இந்த வினோத நோயை 1906 ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மனோவீயல் மருத்துவரும், நரம்பியல் நோயியல் நிபுணருமான ( psychiatrist and neuropathologist ) அலோய்ஸ் அல்ஜைமர் ( Alois Alzheimer ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருடைய பெயரிலேயே இந்த நோய் அழைக்கப்படுகின்றது.

இந்த நோய் 65 வயதைத் தாண்டியவர்களைத் தாக்குகிறது.

2006 ஆம் வருடத்தில் உலக அளவில் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.6 மில்லியன்.

2050 ஆம் வருடத்தில் உலகளாவிய நிலையில் 85 பேர்களில் ஒருவர் இந் நோயால் பாதிக்கப்படுவார் என்று கணித்துள்ளனர்.

இந்த நோய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஏற்பட்டாலும் அனைவருக்கும் சில பொதுவான அறிகுறிகள் தோன்றலாம்.

துவக்க கால அறிகுறியை முதிர் வயது அல்லது மன உளைச்சல் காரணம் என்று பலர் தவறாக எண்ணுவதுண்டு. பொதுவாக சமீபத்திய நிகழ்வுகளை மறந்து விடுவதுதான் பலருக்கு முதல் அறிகுறியாகும். அதைத் தொடர்ந்து குழப்பம், குணத்தில் மாற்றம், மொழியைப் பயன்படுத்துவதில் சிரமம், நீண்ட கால நினைவு இழப்பு, குடும்பத்திலிருந்து தனித்திருப்பது, உடலின் அன்றாட செயல்பாடுகள் இழத்தல் போன்றவை உண்டாகி மரணத்தில் முடியும்..

நோய் உள்ளதை குணத்தில் தோன்றிய மாற்றங்களின் அளவையும், நினைவாற்றலை அறியும் சோதனைகளின் மூலமும் துவக்க காலத்தில் நிர்ணயம் செய்கின்றனர். சிலருக்கு மூளை ஸ்கேன் பரிசோதனையும் தேவைப்படும்.

சிலருக்கு நோய் உள்ளது தெரியாமலேயே நீண்ட நாள் பாதிக்கும். நோய் உள்ளது தெரிந்தபின் 7 வருடங்களே உயிர் வாழ முடியும். நோயின் வளர்ச்சியைக் குறைக்க மருந்துகள் இல்லை. அதனால் மரணம் நிச்சயம் எனலாம்.

அல்ஜைமர் நோய் எவ்வாறு தோன்றுகிறது என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இது மூளையில் ஊத்தைகள் ( plaques ) , சிக்கல்கள் ( tangles ) உண்டாவதால் ஏற்படுகிறது என்று நம்பப் படுகின்றது.

அல்ஜைமர் நோய் இப்படியும் உண்டாகலாம் என்ற சில கருதுகோள்கள் ( hypothesis ) உள்ளன.

* நரம்புகள் வ்ழியாக செய்திகள் அனுப்பும் அசிட்டில்கோலின் ( Acetylcholine ) எனும் இரசாயனம் மூளையில் குறைவு படுவதால் இது உண்டாகிறது. இதுவே மிகவும் பழமையான கருதுகோள்.

* அமைலாய்ட் ( Amyloid ) எனும் கொழுப்பு வகை மூளையில் படிவதால் இது உண்டாகிறது என்றும் நம்பப்படுகிறது.

* டாவ் ( Tau ) எனும் ஒருவித புரோதம் மூளை நரம்புகளில் சிக்கல்களை ( tangles ) ஏற்படுத்துவதால் இது உண்டாகிறது.

அல்ஜைமர் நோயை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1.நோய்க்கு முன் : ஞாபக மறதி , ஒரு இடத்தில் வைத்த பொருளை மறந்து போவது, எதையும் கவனித்து செயல்பட முடியாத நிலை, ஒதுங்கி வாழ விரும்புதல், எளிதில் எறிந்து விழுதல் அல்லது மனச் சோர்வு .

2. நோய் ஆரம்ப நிலை : குறுகிய கால நினைவிழத்தல், நினைவு இழந்தது தெரியாமல் போவது , நடத்தையில் மாற்றத்தை உறவினர் உணர்வது, சில குழப்பமான சூழ்நிலைகள், வார்த்தைகளை உபயோகிப்பதில் சிரமம், பழைய நினைவுகள் இல்லாமல் போவாது , புதிதாக எதையும் செய்ய இயலாதது, முன்பு செய்தவற்றை செய்ய முடியாமல் போவாது, எழுதுவது, வரைவது, உடை உடுத்துவது தெரியாமல் போவது., இவர்கள் தங்களுக்காக செய்ய முயலும் காரியங்களில் அடுத்தவரின் உதவி தேவைப்படும்.

3. நடு நிலைசமீபத்தில் நடந்தவற்றை நினைவு கூறுவதில் அதிக சிரமம், பல சூழல்களில் அதிக குழப்பம், அதிகமான ஆவேசம் அல்லது தயக்கம், தன்னைப் பற்றிய நினைவு கூட இல்லாமல் போவது.

தான் அன்றாடம் செய்து வந்த சுயமான வேலைகளை செய்ய முடியாமல் போய்விடும். பேசும்போது சில வார்த்தைகளை நினைவில் கொண்டு வர முடியாமல் தடுமாறுவார்கள். படிப்பதும், எழுதுவதும் பாதிக்கப்படும். தசைகள் இயக்கம் குறைவதால் அடிக்கடி கீழே விழுந்து விடுவார்கள். நினைவாற்றல் பெரிதும் பாதிப்பதால் நெருங்கிய உறவினர்களைக்கூட அடையாளம் தெரியாமல் போய்விடும். இத்தகைய மாற்றங்களால் உறவினர்களுக்கு பெரும் மன உளைச்சல் உண்டாகும்.

இறுதி நிலைநோயாளி முற்றிலுமாக அன்றாட செயல்பாடுகளுக்கு அடுத்தவரின் உதவியை நாடுவர். பேசுவது சில சொற்கள் மட்டுமே என்ற் நிலையில் குறைந்து போகும். அதன் பின்பு முழுமையாக பேச முடியாமலும் போய்விடலாம். ஆவேசம் இருந்தாலும், அடிக்கடி மிகவும் பயந்த நிலையில் ஒதுங்கி இருப்பர்.

சாதாரண அன்றாட வேலைகள் எதுவும் செய்ய முடியாது. உணவு கூட சொந்தமாக உண்ண இயலாது. தசைகள் முற்றிலும் செயல் படாத நிலையில் படுத்த படுக்கையாகி விடுவர். அல்ஜைமர் நோய் மரணத்தை நோக்கிச் செல்லும் நோய். ஆனால் மரணம் இந்த நோயால் உண்டாவதில்லை. இதன் பின்விளைவுகளான படுக்கைப் புண்களில் கிருமித் தொற்று, நிமோனியா போன்றவற்றால் உண்டாவதாகும்.

அல்ஜைமர் நோய் என்பதை உறுதி செய்ய அதிக சிரமம் இல்லை. நோயாளியின் தோற்றமும், பேச்சும், நடத்தையும், அவரைப் பற்றி உறவினர் விவரிப்பதும் ஏறக்குறைய போதுமானது. சில சமயங்களில் சி.டீ. ஸ்க்கேன், எம். ஆர். ., பி..டீ. ஸ்க்கேன் பரிசோதனைகள் செய்து பார்க்கலாம்.

சிகிச்சை முறைகள்

அல்ஜைமர் நோய்க்கு முறையான சிகிச்சை இல்லை. இந்த நோயைக் குணப்படுத்த இயலாது.இருப்பினும் நோயுடன் சேர்ந்த சில அறிகுறிகளைக் குறைக்க மருத்துவ உதவி தேவைப்படும்.

சில மருந்துகள் பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் பலன்கள் குறைவே. சில சமுதாயமனோவீயல் முறைகள் ( psychosocial ) மூலமாகவும் உதவும் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவற்றிலும் பலன்கள் குறைவுதான். ஆகவே நோயாளியை உடன் இருந்து அவர்மேல் அன்பு செலுத்தி , அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்து , அக்கறையுடன் கவனித்துக் கொள்வதே சிறந்த அணுகுமுறையாகும்.