வியாழன், 26 டிசம்பர், 2013

உலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை.

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ



قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ {15}
'' இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' ' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.திருக்குர்ஆன்.3:15.

உலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் போன்ற செல்வங்களின் மீது உலக வாழ்க்கையில் ஆசை கொள்வது மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக 3:14வது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டி விட்டு,
இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். என்று மேற்காணும் 3:15வது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
உலக வாழ்க்கையில் மேற்காணும் செல்வங்களை மனிதர்கள் திரட்டினாலும் அவைகளை நிரந்தராமாக அவர்களால் அனுபவிக்க முடியாது, காரணம் அவர்களை மரணம் திடீரென கவ்விக் கொள்ளும்.
ஆனால் மறுமையில் மரணம் வராது, அங்கே நிரந்தரமாக அனுபவிக்கலாம்.
அதனால் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மறுமையில் கிடைக்கும் சில இன்பங்களை பட்டியலிட்டுக் கூறி விட்டு அல்லாஹ்வை அஞ்சுவோர் அவற்றை நிரந்தரமாக அனுபவிப்பார்கள் என்று திருக்குர்ஆனில் 3:15 வசனத்திலும் இன்னும் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மறுமையில் கிடைக்கும் இன்பங்களில் மேற்காணும் 3:15 வசனத்தில் ஒன்று இரண்டை மட்டுமே கூறி இருக்கின்றான் இதை விட ஏராளமான இன்பங்கள் மறுமையில் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குக் காத்திருக்கின்றன அவற்றை எவராலும் வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது.
எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி.3244.
மறுமையில் மனம் விரும்புவதெல்லாம் கிடைக்கும், அது மனம் விரும்பியதற்கு மேலாகவும் அமைந்திருக்கும், மனதை மையல் கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கும், கண்கள் குளிரும் விதமாகவும் இருக்கும்.
சோலைகளில் வீற்றிருப்பர்

உலகில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடக் கூடிய ஆறுகள், நதிகளுக்கருகில் மரங்களும், செடி-கொடிகளும் நிறைந்த பசுமையான இடங்களில் சற்று நேரமாவது அமர்ந்திருக்க நம்முடைய உள்ளம் விரும்பும்.
அதற்காக செலவு செய்து பல மைல் தூரம் பயணிக்கவும் செய்கின்றோம்.
எத்தனை செலவு செய்தாலும், எத்தனை மைல் தூரம் பயணித்துச் சென்றாலும் அங்கு நம்மால் நிரந்தரமாக தங்கி இருக்க முடிவதில்லை.
சிறிது நேரம், அல்லது ஒரு சில நாட்களே தங்கி இருக்க நேரிடும். மீண்டும் வெயிலை நோக்கி, வியர்வையை நோக்கி வெகு விரைவில் திரும்பி விடுகின்றோம்.
ஆனால் மறுமையில் (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

உலக வாழ்வில் மார்க்கம் அனுமதித்த வழியில் பொருள் சேர்ப்பதில், அதை நேசிப்பதில் தவறில்லை என்றாலும் இதையே முழு மூச்சாகக் கொண்டு வாழ்நாளை கடத்தி விடக் கூடாது.
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு ( வணங்கி வழிபடுவதற்கு) நேரத்தை ஒதுக்க வேண்டும், ஏன் என்றால் ? மறுமையின் நிரந்தர வாழ்க்கை அல்லாஹ்வை அஞ்சுவோருக்கே கிடைக்கும். என்று மேற்காணும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
நிரந்தரமான மறுமை வாழ்வுக்கு சிறிது நேரத்தை ஒதுக்கி உழைக்க வேண்டும் இயன்றவரை நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் (தஃவா) பணியை செய்ய வேண்டும்.
எழுதியபடி நானும், வாசித்தப்படி நீங்களும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக!.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.