வியாழன், 26 டிசம்பர், 2013

பில்லி சூனியம்

முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறியலாம்.

ஈமான் தொடர்புடைய பிரச்சனையாக இது உள்ளதால் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் கீழ்க்காணும் தலைப்புக்களில் பில்லி சூனியம் பற்றி விரிவாக அலசும் நூல்.

· இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
· மூஸா நபியும் அற்புதங்களும்
· ஈஸா நபியும் அற்புதங்களும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
· மூஸா நபியின் காலத்தில்...
சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்
· நபிகள் நாயகத்துக்கு சூனியம்
பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
· எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
· இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
· ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
முரண்பட்ட அறிவிப்புக்கள்
· 113, 114வது அத்தியாயங்கள்
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
· தவறான மொழிபெயர்ப்பு
சரியான மொழி பெயர்ப்பு
ஹாரூத் மாரூத்
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன.

இதன் காரணமாகத் தான் முஸ்லிம் அறிஞர்களும் இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடமிருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

'மக்களை ஏமாற்றுவதற்காகவும், கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம்; உண்மையில் சூனியத்தின் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை' என்பது தான் சரியான அந்த முடிவாகும்.
சூனியம் என்பதற்கு அரபு மொழியில் ஸிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான்.
உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும், எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான்' என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதம் எனப்படுவது.

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ, சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாக இருந்தால், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிய வந்தால் அதைத் தந்திர வித்தை - மேஜிக் எனக் கூறுவோம்.

இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதம் முதல் வகையிலானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும், ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக 'இவர் நமக்குத் தெரியாத வகையில் ஏதோ தந்திரம் செய்கிறார்; நம்மை ஏமாற்றுகிறார்' என்று அவர்கள் நினைத்தனர்.

இதைக் குறிப்பிட ஸிஹ்ர் - சூனியம் என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்றோ கூறாமல் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 51:52

ஸிஹ்ர் என்ற சொல்லுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம்' என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள்.

'இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார்' என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) எனக் குறிப்பிட்டு நிராகரித்தனர்.