/indian-express-tamil/media/media_files/2025/10/10/chennai-high-court-3-2025-10-10-05-43-59.jpg)
இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் முகமது ஷஃபிக் கூறுகையில், தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்தை நீதிமன்றங்கள் நிரந்தரமாக நடத்த எதிர்பார்க்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கம் (ஏ.டி.எஸ்.வி.எஸ்) என்ற அமைப்பின் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த அமைப்பு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரியின் இடைக்கால நிர்வாகியாக 2006 முதல் பணியாற்றி வந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.இராமமூர்த்தியை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் இடைக்கால நிர்வாகியாக 19 ஆண்டுகளாக நீடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு, அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்தது.
மேலும், 19 ஆண்டுகளுக்கும் மேலாக இடைக்கால நிர்வாகி நீடிப்பது “நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்குகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு, இரண்டு வாரங்களுக்குள் நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரியை அடிப்படையாகக் கொண்ட அகில திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கம் (ATSVS) என்ற அமைப்பை நிர்வகிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. இராமமூர்த்தி அவர்கள் 19 ஆண்டுகள் ஆற்றிய சேவைக்காகவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது பாராட்டைப் பதிவு செய்தது.
ஏ.டி.எஸ்.வி.எஸ் (ATSVS) தலைவர் பதவிக்கு போட்டி இருந்ததால், தவறான நிர்வாகம் நடக்க வாய்ப்புள்ளதாக இடைக்கால நிர்வாகியின் வழக்கறிஞர் அஞ்சியபோதும், மே 10, 2025-ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எல். நோயல்ராஜ்ஜின் தேர்வை, பாதிக்கப்பட்ட தரப்பினர் சவால் செய்வது அவர்கள் கையில் உள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.
ஓய்வுபெற்ற நீதிபதியின் நிர்வாகத்தின் கீழ் ஏ.டி.எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 'சிறந்த நிறுவனம் விருது' பெற்றுள்ளதால், அவர் இடைக்கால நிர்வாகியாகத் தொடர அனுமதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் சமர்ப்பித்த மற்றொரு வாதத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
“முதன்மையாக, தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்தை நீதிமன்றங்கள் நடத்த எதிர்பார்க்கப்படுவதில்லை. அவற்றின் அதிகார வரம்பு, சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும், சட்டப்பூர்வமான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது, பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அமைப்புகளின் விவகாரங்களை நிரந்தரமாக நிர்வகிப்பதற்கு அல்ல” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், நிர்வாகத்தில் உள்ள குழப்பத்தைத் தீர்ப்பதற்கும், சங்கத்தின் ஜனநாயகச் செயல்பாட்டை விரைவில் மீட்டெடுப்பதற்கும் மட்டுமே நீதிமன்றங்கள் இடைக்கால நிர்வாகிகளை நியமிக்கின்றன என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரம் இறுதியாக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளிடமே இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் அல்ல என்று என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி சுப்ரமணியம், இடைக்கால நிர்வாகி நீண்ட காலம் தொடர்வது, ஒரு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, நிர்வாகத்தில் பங்கேற்கும் உரிமை மற்றும் தேர்தல்கள் மூலம் நிர்வாகத்தைக் கேள்வி கேட்கும் உரிமை ஆகியவற்றை மறுக்கிறது என்றும் கூறினார்.
“நிர்வாகிகள் நீண்ட காலம், சில சமயங்களில் பல பத்தாண்டுகள், தொடர்வது ஜனநாயகத்தின் உணர்வையே பாதிக்கிறது” என்று நீதிபதி கூறினார்.
ஏ.டி.எஸ்.வி.எஸ் நிர்வாகத்திற்கான ஒரு திட்டத்தை வகுக்கக் கோரி நோயல்ராஜ் மனு தாக்கல் செய்தார். அதில் 2005-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிவில் வழக்கைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் இராமமூர்த்தியை இடைக்கால நிர்வாகியாக நியமித்தது என்பதை நீதிபதிகள் அமர்வின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இருப்பினும், அந்த வழக்கு 2019-ஆம் ஆண்டில் நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இப்போது ஏ.டி.எஸ்.வி.எஸ் பொதுக்குழு தேர்தலை நடத்தியுள்ளதால், சங்கத்தின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-relieves-retired-judge-serving-as-interim-administrator-of-siddha-medical-college-for-19-years-10546772





