/indian-express-tamil/media/media_files/2025/10/04/vijay-mnh-2025-10-04-10-39-49.jpg)
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தின் அத்தனை சிசிடிவி காட்சிகளையும், குறிப்பாக விஜய் சென்ற பரப்புரை வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி, பதிவுகளை சேகரிக்க வேண்டும் என நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, வரும் 2026 தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக கடந்த மாதம் முதல் தனது பரப்புரையை தொடங்கிய விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதில் 3-வது கட்ட பிரச்சாரமாக கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இதில் நாமக்கலில் பேசிய விஜய் அதன்பிறகு கரூர் சென்றிருந்தார்.
அங்கு விஜயை காண மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், விஜய் பேசும்பேசும்போதே, கூட்டத்தில் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் பரபரப்பு அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசல் அதிகமாகி, பலரும் இடர்பாடுகளில் சிக்கியதால், 41 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட த.வெ.க செயலாளர் மதியழகன் உட்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த், துணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து த.வெ.க.வினர் வெளியேறியது குறித்து நீதிபதி செந்தில்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் விஜய் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போது, பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தின் அத்தனை சிசிடிவி காட்சிகளையும், குறிப்பாக விஜய் சென்ற பரப்புரை வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி, பதிவுகளை சேகரிக்க வேண்டும் என்றும், வழக்கு பதிவு செய்து விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-high-court-order-to-tvk-vjiay-champaign-vehicle-confiscation-10527412