/indian-express-tamil/media/media_files/2025/12/13/mnregs-2025-12-13-08-06-18.jpg)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மறுசீரமைத்து, தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கான வரையறுக்கப்பட்ட வேலை நாட்களை 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் சட்டத்தின் பெயரையே "பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்" என மாற்றுவது தொடர்பான முன்மொழிவை மத்திய அமைச்சரவை விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சட்டம் 100 நாட்களுக்கு வேலைக்கு உத்தரவாதம் அளித்தாலும், 2024-25 நிதியாண்டில் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சராசரி வேலை நாட்கள் சுமார் 50 நாட்களாகவே இருந்தது. உண்மையில், கடந்த ஆண்டு 100 நாட்களை நிறைவு செய்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சம் ஆகும். தற்போதைய நிதியாண்டில் (2025-26), வெறும் 6.74 லட்சம் குடும்பங்களே 100 நாள் உச்ச வரம்பை எட்டியுள்ளன.
இதனிடையே 125 நாட்கள் வேலை என்ற முன்மொழிவு, 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளில் இந்தத் திட்டம் தொடர்வதற்கான ஒப்புதல் நடைமுறையை அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை நிர்வகிக்கும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு குழு, மாநிலங்களின் செயல்பாடு மற்றும் திட்ட நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி ஆய்வு செய்து, அக்குழு கடந்த ஆண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ல் இயற்றப்பட்டது. அப்போதைய அரசாங்கம் இச்சட்டத்திற்கு 2009 அக்டோபர் 2 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் எனப் பெயர் மாற்றியது.
தற்போது, சட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், உறுதியளிக்கப்பட்ட வேலை நாட்களை 100-லிருந்து 125 ஆக உயர்த்துவதற்கும் என்.டி.ஏ அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலத்தில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரி வந்துள்ளன. மாநிலங்கள் 100 நாட்களுக்கு மேல் வேலை வழங்க முடியும் என்றாலும், அதற்கான நிதியைத் தாங்களே திரட்ட வேண்டும், ஆனால் இதனை மிகக் குறைந்த மாநிலங்களே செய்கின்றன.
கடந்த நிதியாண்டில் (2024-25) உருவாக்கப்பட்ட 290 கோடி நபர்கள் வேலை நாட்களில், மாநிலங்கள் தங்கள் சொந்த வரவு செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தி உருவாக்கியது வெறும் 4.35 கோடி நபர்கள் வேலை நாட்கள் மட்டுமே. தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தி வேலைகளை உருவாக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகியவை அடங்கும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் சட்டத்தின்படி, திறமையற்ற உடல் உழைப்பு வேலை செய்ய முன்வரும் கிராமப்புறக் குடும்பத்தின், உறுப்பினர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதிய வேலை பெறத் தகுதியுடையவர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை சட்டத்தின் பிரிவு 3 (1) ஒரு கிராமப்புறக் குடும்பத்திற்கு ஒரு நிதியாண்டில் "குறைந்தபட்சம் 100 நாட்களுக்குக் குறையாத" வேலைக்கு வழிவகை செய்கிறது.
வனப்பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு பழங்குடியினர் குடும்பத்திற்கும், வன உரிமைச் சட்டம், 2016-ன் கீழ் வழங்கப்பட்ட நில உரிமைகளைத் தவிர வேறு எந்தச் சொந்தச் சொத்தும் இல்லை என்றால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை கிடைக்க உரிமை உண்டு. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் பிரிவு 3(4)-ன் கீழ், வறட்சி அல்லது வேறு ஏதேனும் இயற்கைப் பேரிடர் (உள்துறை அமைச்சகத்தின்படி) அறிவிக்கப்பட்ட கிராமப்புறப் பகுதிகளில், 100 நாட்களுக்கு மேலாக கூடுதலாக 50 நாட்களுக்கு வேலை வழங்கவும் அரசு அனுமதிக்கிறது.
2005-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் மூலம் 4,872.16 கோடி நபர்கள் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ11,74,692.69 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2020-21-இல், கோவிட் காலத்தில் 7.55 கோடி கிராமப்புறக் குடும்பங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தியபோது, வேலைக்கான தேவை அதிகரித்தது. கோவிட்-19 பொது ஊரங்கின்பொது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறியது.
கடந்த நான்கு ஆண்டுகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது. 2021-22-இல் 7.25 கோடியிலிருந்து, 2024-25-இல் 5.79 கோடியாகக் குறைந்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் (2025-26), டிசம்பர் 12, 2025 வரை 4.71 கோடி குடும்பங்கள் (6.25 கோடி தனிநபர்கள்) இத்திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்தத் திட்டம் தொடர, 2029-30 வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ 5.23 லட்சம் கோடி ஒதுக்கீடு கோரி, செலவின நிதிக்குழுவிற்கு ஒப்புதலுக்காக ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது.
மகாத்மா காந்தியின் பெயரைச் சேர்ப்பது, ஒடுக்கப்பட்ட மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக விளிம்புநிலைச் சமூகங்களுக்கான சட்டத்தின் சமபங்கு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையை வலுப்படுத்தும் என்று அரசாங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/central-government-100-to-125-days-mnrega-scheme-to-get-name-change-10906134





