சனி, 4 அக்டோபர், 2025

கரூர் துயர சம்பவம்: சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியீடு

 


karur 1

கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விவரம் வெளியாகியுள்ளது

கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து த.வெ.க மாவட்ட செயலாளர்கள் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக  வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர்  இடம்பெற்றுள்ளனர். எஸ்.பி.க்களுடன், ஏ.டி.எஸ்.பி-க்களும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறப்பு புலனாய்வு குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

4 10 2025 

source https://tamil.indianexpress.com/tamilnadu/karur-death-case-special-investigation-team-list-released-10527439