செவ்வாய், 7 அக்டோபர், 2025

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல்:

 

mk

உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை, ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீசி தாக்க முயன்றார். மேலும்,  'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூறி கூச்சலிட்டார். அந்நபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வழக்கறிஞர்  ராஜேஷ் கிஷோரை, சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்  "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”நீதிபதி பி.ஆர். கவாய்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்குள் நடந்த இழிவான செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயரிய நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதல் ஆகும்.  இது மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது.

தலைமை நீதிபதி இந்தச் சம்பவத்திற்கு அமைதி, நிதானம் மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம், நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்காக வெளியிட்ட காரணம், நம் சமூகத்தில் அடக்குமுறை மற்றும் படிநிலை மனப்பான்மை எவ்வளவு ஆழமாக இன்னும் நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/shoe-throw-supreme-court-chief-justice-tn-cm-mk-stalin-condemns-10534950