/indian-express-tamil/media/media_files/2025/12/09/rahul-gandhi-lok-sabha-winter-session-2025-12-09-18-42-11.jpg)
Rahul Gandhi
மக்களவையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில், நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்த விவாதம் இன்று சூடு பிடித்தது. எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையின் புனிதத்தன்மை குறித்து அழுத்தமான உரையாற்றினார்.
அவர் பேசியதவது,
"இது வெறும் அரசியல் விவாதம் அல்ல. இது நமது தேசத்தின் ஆன்மா பற்றியது. நமது இந்தியா 150 கோடி மக்கள் கொண்ட ஒரு துணி. அது ஒவ்வொரு வாக்குகளாலும், ஜனநாயகத்தின் புனிதத்தன்மையாலும் நெய்யப்பட்டது. தேர்தல் செயல்முறைதான் இந்தக் கட்டமைப்பை ஒன்றாக இணைக்கும் அடித்தளம்.நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த, மத்திய அரசு உடனடியாக மூன்று சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தலுக்குக் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னராவது, 'மெஷின் படிக்கக்கூடிய' வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்பட வேண்டும். இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிப்பதற்கு அனுமதிக்கும் சட்டம் உள்ளது. இந்தச் சட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். வாக்குச் சாவடியில் நடந்ததற்கான ஆதாரம் பாதுகாக்கப்படுவது அவசியம்.
மின்னணு வாக்கு இயந்திரங்களின் (EVM) உள் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாட்டைப் பரிசோதனை செய்வதற்கு, நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் நிறுவனங்களைக் கைப்பற்றுதல்
என் அன்பான நண்பர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் சமம் என்ற கருத்தே அவர்களைத் தொந்தரவு செய்கிறது. ஆர்.எஸ்.எஸ். சமத்துவத்தில் அடிப்படையிலேயே நம்பிக்கை வைப்பதில்லை; அது ஒரு படிநிலை அமைப்பையே நம்புகிறது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். இன் திட்டம், இந்தியாவின் நிறுவன கட்டமைப்பை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதுதான்.
இன்று தேர்தல் ஆணையத்தின் மீது நான் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். தேர்தல் ஆணையம் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் கூட்டு சேர்ந்து, தேர்தலைத் திசைதிருப்பி வருகிறது. ஆம்! தேர்தல் ஆணையத்தில் ஒரு 'நிறுவனக் கைப்பற்றல்' (Institutional Capture) நடந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை நான் கொடுத்திருக்கிறேன்.
நான் கேட்கும் 3 கேள்விகள்:
மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்த, நான் மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்:
தலைமை நீதிபதி (CJI) ஏன் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்?
பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏன் சட்டத்தை மாற்றி தேர்தல் ஆணையர்களுக்கு 'சட்டப் பாதுகாப்பு' (Immunity) என்ற பரிசை அளித்தார்கள்?
சிசிடிவி பதிவுகளைப் பாதுகாப்பது குறித்த சட்டம் ஏன் மாற்றப்பட்டது?
சட்டங்களை மாற்றி, தேர்தல் அமைப்பைச் சிதைப்பது ஏன்? ஹரியானா தேர்தல்கூட திருடப்பட்டது. அந்தத் திருட்டுக்குத் தேர்தல் ஆணையமே பொறுப்பு” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்
வாக்குத் திருட்டுதான் மிகப்பெரிய தேச விரோதச் செயல்!
மேலும் தனது பேச்சின் உச்சகட்டமாக, “நாம் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம். ஆனால், தேர்தல் செயல்முறையில் தலையிடுவது என்பது நமது தேசத்தின் ஆன்மாவையே தாக்கும் செயலாகும்.
"வாக்குத் திருட்டு (Vote Chori)தான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தேச விரோதச் செயல். நீங்கள் வாக்குகளை அழிக்கும்போது, இந்தியாவின் கருத்தையே அழிக்கிறீர்கள். மறுபக்கத்தில் அமர்ந்திருக்கும் அவர்கள்தான், வாக்குத் திருட்டைச் செய்து தேச விரோதச் செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்!” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-lok-sabha-winter-session-electoral-reforms-evm-architecture-10896091





