வியாழன், 9 அக்டோபர், 2025

மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்; மதுரையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்ம நபர்கள்: கிராம மக்கள் புகார்

 


Madurai

மதுரை மாவட்டம் அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேங்கைவயல் சம்பவம் மீண்டும் நினைவுக்கு வந்துள்ளது.

பட்டியலின மக்கள் பெருமளவில் வசிக்கும் அமச்சியாபுரம் கிராமத்தில், மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த இரண்டு நாட்களாக கடும் துர்நாற்றம் வீசியதால், கிராம மக்கள் அவதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து தொட்டியை திறந்து பார்த்தபோது, அதில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த கேவலமான செயலில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக மக்கள் ஊராட்சி செயலரிடம் புகார் அளித்தும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தொட்டியை சுத்தம் செய்யப்படாததால் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், குடிநீரின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், 2022 டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற இதேபோன்ற குடிநீர் மலம் கலப்பு சம்பவத்தை நினைவூட்டியுள்ளது. அந்தச் சம்பவத்தில் இதுவரை உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

அமச்சியாபுரம் சம்பவத்தையும் பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. பட்டியலின மக்கள் வாழும் கிராமங்களை குறிவைத்து இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்கள் நடைபெறுவது கவலைக்குரியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வேங்கைவயல் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தால், இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் நடந்திருக்காது,” என்று சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன. மர்ம நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 10 2025

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilandu-madurai-village-drinking-water-tank-toilet-issue-update-10542621