45 நாட்கள், 33 கேள்விகள்; தமிழகத்தில் ஜூலை 17-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: அரசாணை வெளியீடு 6 3 2026
/indian-express-tamil/media/media_files/2025/10/29/census-secretariate-2025-10-29-20-00-29.jpg)
தமிழகத்தில் ஜூலை 17-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 30 வரை 45 நாட்கள் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்படி கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 2021-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரங்கு உத்தரவு அமலில் இருந்ததால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படவில்லை. இதனிடையே நாடு முழுவதும் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வீடுகள், கட்டிடங்கள், வீட்டில் உள்ள வசதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதன்பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். அப்போது ஒவ்வொரு நபரின் சமூக, பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த சூழலில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள், சின்னங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று அறிமுகம் செய்தார்.
இதன் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக 4 டிஜிட்டல் தளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய புதிதாக ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தளத்தை 16 மொழிகளில் பயன்படுத்த முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்புக்காக புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வட்டார, மாவட்ட, மாநில நிலைகளில் உள்ள அதிகாரிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை இந்த தளம் வாயிலாக கண்காணிக்க முடியும்.
அதன்படி தமிழகத்தில் வரும் ஜூலை 17ந் தேதி முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ந் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளில், வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் என 33 கேள்விகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகளும் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.





