சபதம் எடுத்த ஈரான்: மிகப்பெரிய சக்தியால் தாக்குவோம்... ஓபனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமேனி ஆட்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுப்பதாக கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா இப்போது அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை குறிவைத்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவதாக ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கைக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தினால் இதுவரை இல்லாத சக்தியை கொண்டு அவர்களை தாக்குவேன் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக. அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.





