வியாழன், 5 மார்ச், 2026

ஈரான் போர்: ஜவுளித் துறை ஏற்றுமதி பாதிப்பு; கோவை தொழில் துறையினர் கவலை

 

textile sector

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய ஜவுளித் துறை, குறிப்பாக கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் பெரும் கவலையடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்த போர் சூழல், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்டுக்குச் சுமார் 300 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி நடைபெறுகிறது. இதில் பெரும் பகுதியாக, 200 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 8 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், தற்போதைய போர் சூழல் இந்த வர்த்தகத்தைச் சிதைக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர். போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது நேரடியாக பாலியஸ்டர் நூல்களின் விலையில் எதிரொலிக்கும். பெட்ரோலிய உபபொருட்களின் விலை உயர்வு, எரிசக்தி மற்றும் போக்குவரத்து வாடகை உயர்வு என இது ஒரு சங்கிலித் தொடர் போல உற்பத்தி செலவை அதிகரிக்க வழிவகுக்கும்.

போர் பதற்றம் காரணமாக, வழக்கமான கடல் வழிப் பாதைகளைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சரக்குகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணக் காலம் கூடுதலாக 22 நாட்கள் வரை அதிகரிக்கிறது. கண்டெய்னர் வாடகை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துச் செலவுகளும் அதிகரிப்பதோடு, கோடைகாலத்திற்கான ஜவுளி ஆர்டர்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க முடியாமல் போகும் சூழல் நிலவுகிறது. அவ்வாறு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில், ஏற்றுமதியாளர்கள் பெரும் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்காவின் வரி விதிப்பு முறைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த ஜவுளித் துறை, அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் தற்போது வெடித்துள்ள இந்த போர் சூழல், மீண்டும் ஒரு கடுமையான நெருக்கடியைத் தந்துள்ளது. ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வருவது மட்டுமே ஜவுளித் துறையின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதே ஒட்டுமொத்த தொழில் துறையினரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்


source https://tamil.indianexpress.com/tamilnadu/impact-on-textile-exports-due-to-iran-conflict-concerns-mount-among-coimbatore-industrialists-11176550