/indian-express-tamil/media/media_files/2026/03/05/iran_42089-1600-2026-03-05-15-09-41.jpg)
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கக் கப்பற்படை இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாகப் பரவி வரும் செய்திகளை மறுத்துள்ள இந்திய அரசு இத்தகைய தகவல்கள் "அடிப்படை ஆதாரம் அற்றவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதியில் இருந்து ஈரானில் தாக்குதல் நடத்தி வருகின்றனா. அணு ஆயுதம் தொடர்பான பிரச்னைகள் காரணமாக நடைபெற்று வரும் இந்த மோதல், 4-5 வாரங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிபர்கள் கூறி வரும் நிலையில், ஈரானின் உச்சத்தலைவர் தனது குடும்பத்துடன் கொல்லப்பட்டார். ஈரானும், பதிலுக்கு துபாய், சவுதி, குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதராவாக ரஷ்யாவும், அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைனும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலுக்கு, அமெரிக்க கப்பற்படை இந்தியாவின் துறைமுகங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் மற்றும் ஜோடிக்கப்பட்டவை என்று மத்திய வெளியுறுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் ஓய்வுபெற்ற கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் (Douglas Macgregor) சமீபத்தில் 'ஓபன் அமெரிக்கா நியூஸ்' (OAN) என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "மேற்கு ஆசியாவில் உள்ள எங்களது தளங்கள் மற்றும் துறைமுக நிறுவல்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாங்கள் இந்தியா மற்றும் அதன் கடற்படைத் துறைமுகங்களைச் சார்ந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது," எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த கருத்தை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு (Fact-Check) குழு தனது எக்ஸ் தளத்தில், இந்தச் செய்தியை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 'ஓபன் அமெரிக்கா நியூஸ்' சேனலில், இந்தியத் துறைமுகங்களை அமெரிக்கக் கப்பற்படை பயன்படுத்துவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இத்தகைய ஆதாரமற்ற கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
மேலும், அந்தப் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து, அதன் மேல் பொய்ச் செய்தி ('Fake News') என்று முத்திரை குத்தி அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக சர்வதேச அளவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவின் பெயரை இத்தகைய விவகாரங்களில் இழுப்பது தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்பதால், அரசு உடனடியாக இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், இத்தகைய தவறான பிரச்சாரங்களைத் தடுப்பதிலும் உறுதியாக உள்ளது.
source https://tamil.indianexpress.com/india/ndia-rejects-reports-us-use-indian-ports-iran-war-baseless-11177476





