/indian-express-tamil/media/media_files/2026/03/06/upi-circle-2026-03-06-12-05-43.png)
ஒரே பேங்க் அக்கவுண்ட், 5 பயனர்கள்... அசத்தும் புதிய 'யுபிஐ சர்க்கிள்' வசதி!
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயங்கும் பெரியவர்கள் அல்லது வரம்பின்றிச் செலவு செய்யும் சிறுவர்கள் என ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்பரிவர்த்தனையில் சவாலான சூழல் இருக்கும். இதனைத் தீர்க்கவே தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'யு.பி.ஐ சர்க்கிள்' (UPI Circle) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
யு.பி.ஐ சர்க்கிள் என்றால் என்ன?
இது முதன்மைப் பயனர் (Primary User), தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு (குடும்பத்தினர் அல்லது சார்ந்திருப்போர்) தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த அதிகாரம் அளிக்கும் வசதியாகும். இதில் கணக்கு உரிமையாளரே முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார். டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யத் தயங்கும் முதியவர்கள், தங்கள் பிள்ளைகளின் கணக்கு மூலம் பாதுகாப்பாகச் செலவு செய்ய இது உதவும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு 'டிஜிட்டல் பாக்கெட் மணி' வழங்கலாம். இதன் மூலம் அவர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்காணிக்க முடியும். சிறு வணிகங்களுக்கு அதாவது கடை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களிடம் எரிபொருள், இதர செலவுகளுக்காகக் குறிப்பிட்ட வரம்புடன் இந்த வசதியை வழங்கலாம்.
யு.பி.ஐ சர்க்கிள் -ஐ அமைப்பது எப்படி?
நீங்க முதன்மைப் பயனராக இருந்தால், உங்க யு.பி.ஐ செயலியை (GPay, PhonePe, Paytm போன்றவை) திறக்கவும். Profile / Settings பகுதிக்குச் செல்லவும். யு.பி.ஐ சர்க்கிள் அல்லது Delegate Payments என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். நம்பிக்கையான நபரின் (Trusted Person) யு.பி.ஐ ID அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும். அனுமதி வகையைத் (Permissions) தேர்ந்தெடுக்கவும். முழு அதிகாரம் (Full Delegation) உங்க ஒப்புதல் இன்றி அவர்கள் பணம் செலுத்தலாம். பகுதி அதிகாரம் (Partial Delegation) ஒவ்வொரு முறை அவர்கள் பணம் செலுத்தும்போதும் உங்க அனுமதி தேவைப்படும். செலவுக்கான வரம்பை (Spending Limit) நிர்ணயித்து, உங்கள் யு.பி.ஐ பின் மூலம் உறுதி செய்யவும்.
முக்கிய விதிமுறைகள்
ஒரு முதன்மைப் பயனர் அதிகபட்சமாக 5 பேரை தனது கணக்கில் இணைக்கலாம். மாதாந்திரச் செலவு வரம்பு அதிகபட்சமாக ரூ.15,000 வரை நிர்ணயிக்கப்படலாம். இந்த அணுகல் அனுமதியை 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் வழங்கலாம். பரிவர்த்தனைகளை நேரலையில் (Real-time) கண்காணிக்கவும், எப்போது வேண்டுமானாலும் அனுமதியை ரத்து செய்யவும் வசதி உண்டு.
பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த இந்த அம்சம் உதவும் என வெர்னோஸ்ட் (Vernost) நிறுவன தலைமை அதிகாரி பங்கஜ் திரிபாதி தெரிவித்துள்ளார். அதேசமயம், பயனர்கள் யாருக்கு அனுமதி வழங்குகிறோம் என்பதில் கவனமாகவும், அவ்வப்போது தணிக்கை செய்தும் வரம்புகளைச் சரிபார்க்க வேண்டும் என கிவி (Kiwi) நிறுவனத்தின் சித்தார்த் மேத்தா எச்சரித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/business/what-is-upi-circle-how-to-delegate-payments-to-your-family-members-safely-11179926





