/indian-express-tamil/media/media_files/2026/03/01/plus-2-exam-2-2026-03-01-14-15-56.jpg)
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 2) பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 3412 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பள்ளி இறுதி வகுப்பான பிளஸ் 2-க்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கு முன்பாக நடத்தப்படும் இந்த தேர்வை மாணவர்கள் மட்டும் இல்லாமல், அவர்களின் பெற்றோர்களும் இந்த தேர்வுக்காக காத்திருப்பார்கள். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தேதி தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3412 மையங்களில் 8,27,475 மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். இன்று தொடங்கும் இந்த தேர்வு வரும் மார்ச் 26-ந் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு வரும் மாணவர்கள் தேர்வு நடக்கும் மையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதேபோல் இந்த தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு நடைபெறும் அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள்கொண்டு வர அனுமதி இல்லை. மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை தவறாமல் பின்பற்றி நடக்கவேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்புக் குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் நேரம் உள்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுக்கம் இல்லாத செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். அதேபோல் தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்றும் 94983 83075, 94983 83076 எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-plus-2-public-exam-start-today-march-2-guidelines-and-instructions-11167624





