ஞாயிறு, 1 மார்ச், 2026

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க ஒதுக்கிய தொகுதிகள்

 New Project (3)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆளும் கட்சியான தி.மு.க தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, கூட்டணி கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் மற்றும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஐ.யு.எம்.எல் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தி.மு.க குழுவினர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.  

இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இன்று மனிதநேய மக்கள் கட்சியுடன் (ம.ம.க) தி.மு.க குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டனர். அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) கட்சியுடனான பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிந்தது. அக்கட்சிக்கு தி.மு.க கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஐ.யு.எம்.எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கையெழுத்திட்டுள்ளார். 

கடந்த தேர்தலில் ம.ம.கவுக்கு 2 தொகுதி, ஐ.யு.எம்.எல் -க்கு 3 தொகுதி:

கடந்த 2021 தேர்தலிலும் ம.ம.க-வுக்கு 2 தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருந்தன. இம்முறை ம.ம.க வேட்பாளர்கள் தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக ஜவாஹிருல்லா உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில்  இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகள் எவை என்பது குறித்து தி.மு.க பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-election-2026-dmk-intensifies-seat-sharing-talks-with-alliance-partners-11165459