அயதுல்லா காமேனி மரணம்: ஈரானின் அடுத்த தலைவர் யார்?
/indian-express-tamil/media/media_files/2026/03/01/khamenei-x-2026-03-01-13-22-43.jpg)
1989 முதல் ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான அயதுல்லா கமேனி தற்போது கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவை உறுதிப்படுத்தின. அவர் சுமார் 37 ஆண்டுகள் ஈரானை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார். ஈரான் தற்போது 40 நாட்கள் அதிகாரப்பூர்வ துக்க காலத்தையும், ஏழு நாட்கள் தேசிய விடுமுறையையும் அறிவித்துள்ளது.
1 3 2025
வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்," என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார். "எங்களுடைய உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்ப முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டதில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாமல் போனது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி - ஈரானை அடுத்து ஆளப்போவது யார்? கமேனி இதுபோன்ற ஒரு தருணத்திற்காக ஏற்கனவே தயாராக இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் போர் பதற்றத்தின் போது, தனக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று பெயர்களை அவர் பரிந்துரைத்திருந்தார்.
'நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்' - டிரம்ப்
ஈரானை வழிநடத்த "சில நல்ல வேட்பாளர்கள்" இருப்பதாக டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார். சிபிஎஸ் (CBS) செய்தியாளர் ஒருவர் ஈரானின் பொறுப்பில் இப்போது யார் இருக்கிறார் என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல முடியாது" என்று டிரம்ப் பதிலளித்துள்ளார்.
ஈரானின் அடுத்த தலைவராக நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, "ஆம், சில நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்" என்று கூறினார். ஆனால் அவர்கள் யார் என்பதை அவர் விவரிக்கவில்லை.
நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, ஈரானின் உச்ச தலைவர் ஒரு மூத்த ஷியா மதகுருவாகவும் அறிஞராகவும் இருக்க வேண்டும். அவர் 'நிபுணர்கள் சபை' எனப்படும் மதகுருமார்களின் குழுவால் நியமிக்கப்பட வேண்டும்.
ஆறு மூத்த ஈரான் அதிகாரிகளின் நேர்காணல்களின் அடிப்படையில், கமேனி பரிந்துரைத்த மூன்று பெயர்கள்:
கோலம்-ஹுசைன் மொஹ்சேனி-எஜேய் (நீதித்துறைத் தலைவர்)
அலி அஸ்கர் ஹெஜாசி (கமேனியின் தலைமை அதிகாரி)
ஹசன் கொமேனி (சீர்திருத்தவாத அரசியல் பிரிவைச் சேர்ந்த மதகுரு மற்றும் அயதுல்லா கொமேனியின் பேரன்)
கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா (56) தலைவராவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ஏனெனில் இந்தப் பதவி வாரிசு அடிப்படையில் தொடரக்கூடாது என்று கமேனியே தனது ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார். மேலும், ஷியா முஸ்லிம் மதகுருமார்களிடையே தந்தைக்கும் பின் மகன் பதவிக்கு வருவதை விரும்புவதில்லை. மொஜ்தபா ஒரு உயர்மட்ட மதகுரு இல்லை என்பதும், ஆட்சியில் அவருக்கு அதிகாரப்பூர்வ பதவி இல்லை என்பதும் கூடுதல் தடைகளாகும்.
சி.என்.என் செய்தியின்படி, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய 88 மூத்த மதகுருக்கள் கொண்ட 'நிபுணர்கள் சபை' பரிசீலிக்க வாய்ப்புள்ள முக்கிய பெயர்கள்:
அலிரேசா அராபி (67): கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர். நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராக உள்ளார். மத ரீதியாக வலுவானவர் என்றாலும், பெரிய அரசியல் சக்தியாகக் கருதப்படுவதில்லை.
முகமது மெஹ்தி மிர்பாகேரி (60-களின் தொடக்கம்): தீவிரவாதப் போக்குடைய மதகுரு. மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். நம்பிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது என்ற கருத்துடையவர்.
ஹசன் கொமேனி (50-களின் தொடக்கம்): இஸ்லாமியக் குடியரசைத் தோற்றுவித்த அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் பேரன். இவர் மற்றவர்களை விடக் குறைவான தீவிரப்போக்கு கொண்டவர் எனக் கருதப்படுகிறார். கமேனி பரிந்துரைத்த பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60-களின் இறுதியில்): நிபுணர்கள் சபையின் முதல் துணைத் தலைவர். கமேனிக்கு நெருக்கமானவர் என்றாலும், பாதுகாப்புப் படைகளுடன் (ஐ.ஆர்.ஜி.சி) இவருக்குப் பெரிய தொடர்புகள் இல்லை.





