திங்கள், 22 ஜூலை, 2013

செருப்படி

இந்துத்துவா விற்கு விழுந்த செருப்படி ...

காந்தியைக் கொல்வோம் (வெளிச்சம்)

காந்தியின் கொள்ளுப் பெயரன் துசார் காந்தி எழுதிய காந்தியைக் கொல்லுவோம் என்கிற நூல் சமீபத்தில் பரபரப்பினை உண்டாக்கிய ஒன்று.

இந்நூலினை, தான் எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது, சமீப காலங்களில் இந்துத்துவ போன்ற அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார்கள். கோட்சேவை ஒரு வீரப் புருஷனாகச் சித்தரித்து வருகின்றனர்.

காந்தியின் தூண்டுதலால்தான் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உண்டாகியதாகவும், சுதந்திர இந்தியாவை வலியுறுத்தி 55 கோடி ரூபாயினைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வைத்தது காந்திதான் என்றும், எப்பொழுதுமே சிறுபான்மை இசுலாமியர்களுக்கே காந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தியதும், அதனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு எந்தக் கேடு வந்தாலும் கவலை கொள்ளாமல் இருந்தது போன்றவை இந்துமத வெறியர்கள் காந்தியின் கொலைக்கான காரணங்களாகக் கூறும் முக்கியக் குற்றச்சாட்டுகள். இதைப் பற்றி எந்தக் கவலையும் சொரணையும் இல்லாமல் காந்தியவாதிகளும், காங்கிரஸ்காரர்களும் வாளாக இருப்பதுதான் வேதனை என்கிறார் துசார் காந்தி. இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் மீண்டும் பார்ப்பனிய பனியா கூட்டங்கள் தலைதூக்கி இந்து ராச்சியம் என்கிற பெயரில் மீண்டும் பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்திவிடுவார்கள் என்கிற கவலையோடும் கோபத்தோடும் எழுதப்பட்ட நூல்தான் காந்தியைக் கொல்லுவோம் என்கிறார். ஏன் இந்த விந்தையான தலைப்பு என்று கேட்கத் தோன்றும். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே மற்றும் அவனது கூட்டாளி ஆப்டே பூனா நகரத்தில், இந்து மகாசபையின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்.

இவர்கள் அக்ரனீ என்கிற நாளிதழை நடத்தி வந்தார்கள். (இந்நாளிதழ் தடை செய்யப்பட்டவுடன் இந்து ராஷ்டிரா என்கிற வேறு பெயரில் அதனை மீண்டும் வெளிக்கொண்டு வந்தனர்). இப்பத்திரிகை மூலமாக அவர்கள் இசுலாமிய எதிர்ப்பு விஷக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். அத்துடன் சர்வர்கரின் நச்சுக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதும் அவர்களது பிரதான வேலையாக இருந்தது. இந்தப் பத்திரிகையை நடத்த அவர்கள் இசுலாமிய வெறிக் கொண்ட பெரும் பணக்காரர்களான மார்வாரிகள், பனியாக்கள் போன்றோரை நம்பி இருந்தனர். இவர்களிடம் இசுலாமியர்களை எதிர்த்து இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்று வாய்ச் சவடால்விட்டு பணத்தைக் கறந்து பத்திரிகையினை நடத்தி வந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பண முதலாளிகள் பணம் தருவதை நிறுத்திவிட்டனர். இவர்களது நம்பகத்தன்மை பெருமளவில் குறைந்து வருகின்ற சமயத்தில், ஏதாவது செய்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள யோசிக்கின்ற வேளையில், கோட்சே நாம் ஏன் காந்தியைக் கொல்லக் கூடாது எனக் கேட்கிறான். அந்தக் கேள்வியே இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத இரத்தக் கறையை ஏற்படுத்தியது. துசார் காந்தி இதனையே தன் நூலுக்குத் தலைப்பாகக் கொள்கிறார்.

காந்தியைக் கொன்றதற்குக் கூறப்படும் காரணங்கள் புதியவை ஒன்றும் அல்ல. ஏற்கெனவே கோட்சே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம்தான். அதைத்தான் இன்று இந்துமத வெறியர்கள் தூசி தட்டி எடுத்துள்ளனர். சரியாக எழுதப் படிக்கத் தெரியாத _ பள்ளிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்ட கோட்சே பக்கம் பக்கமாய் மணிக்கணக்கில் புலமை வாய்ந்த ஆங்கிலத்தில் பேசியதுதான் விந்தை. அவன் நீதிமன்றத்தில் படித்த உரையினை நன்றாக ஆராய்ந்தால் தெரியும் அது யாருடைய உரை என்பது. அய்யமின்றி சர்வர்கரின் எழுத்தேதான். சர்வர்கர் ஆங்கிலத்திலும் மராட்டியத்திலும் புலமை பெற்றவர். கேட்போரைக் கட்டியிழுக்கும் சொல் வீச்சினை உடையவர், அத்தகைய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்தான் படிப்பறிவற்ற பாமர இளைஞர்களை அவர்தம்பால் இழுத்தது. இப்படித்தான் மராட்டிய மாநிலத்தில் இந்து மகாசபை, போன்ற அமைப்புகள் வளர்ந்தன.

காந்தியைக் கொன்றதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் பொய்யானவை மற்றும் ஒன்றுக்கும் உப்புப் பெறாதவை. ஏனெனில், காந்தியை ஒரு முறை அல்ல, அய்ந்து முறை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. 1934இல் இருந்து இந்து மத வெறியர்கள் முயற்சித்துள்ளனர். அச்சமயம் பாகிஸ்தான் என்றோ பிரிவினை என்றோ பேச்சு எழாத நேரம். முஸ்லிம் லீகுகூட பிரிவினையினைப் பற்றி நினைத்துப் பார்க்காத காலகட்டம். முஸ்லிம் லீகும், முகமது அலி ஜின்னாவும் பிரிவினை கேட்கத் தூண்டியதே காங்கிரசும் அதன் தலைமையும்தான். நேரு தலைமையில் 1946இல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முடிவின்படி, சுதந்திர இந்தியாவின் நிர்வாக விஷயங்களை காங்கிரஸ் கட்சியே முடிவு செய்யும், மற்றும் எந்த அமைப்புடனும் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்கள் செல்லாது என முடிவு செய்தனர். இது குறிப்பாக முஸ்லிம் லீகுக்கு விடப்பட்ட சவால். இனி காங்கிரஸ் கட்சியையும் நேருவையும் நம்பி ஏமாற முடியாது என ஜின்னா தனி நாடு கோரிக்கையை வைத்தார். இது நடந்தது 1946இல் அப்படி இருக்க 1934லேயே காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தால் அதற்கு வேறு காரணங்கள்தானே இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் காந்தி பிரிவினையை எதிர்த்தவர். பிரிவினைக்குப்பின் ஏற்பட்ட உயிர் இழப்புகள் அவரை பாகிஸ்தானிற்குச் சென்று அவர்களிடம் பேசி எப்படியாவது மீண்டும் இந்தியாவுடன் இணைக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது. அடுத்து, 55 கோடி ரூபாயைப் பொறுத்தவரை பாகிஸ்தானிற்குக் கொடுப்பதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியே இல்லை. ஏனென்றால், பிரிவினை சமயத்தில் போடப்பட்ட ஒப்பந்தமானது மொத்தமுள்ள பணத்தினை நிலத்தின் அளவிற்கு ஏற்ப இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது என்பதாகும். இதில் முதல் தவணையாக 20 கோடி ரூபாய் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் காஷ்மீர் யாருக்கு என்பதில் இரு நாடுகளுக்கும் பிரச்சினை உருவாகியது.

மீதி ரூபாய் 35 கோடியைக் கொடுத்தால் பாகிஸ்தான் அப்பணத்தை இந்தியாவினை எதிர்க்க ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்திவிடும் என அச்சப்பட்டு, பணத்தைத் தரக்கூடாது என காங்கிரஸ் அரசாங்கம் முடிவு செய்தபொழுது, பன்னாட்டு அழுத்தம், மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மை அடிபட்டுப் போய்விடும் போன்ற காரணங்களால் நேருவின் அரசாங்கம் முடிவை மாற்றிக் கொண்டது. காந்திக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

உண்மை இப்படி இருக்க, காந்தியை ஏன் கொல்ல முயற்சிக்க வேண்டும்?

சர்வர்கர், கோட்சே, ஆப்டே ஆகியோர் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்கள். இவர்கள் பார்ப்பனர்களில் தங்களை உயர்வாக கருதிக் கொள்பவர்கள். சித்பவன் என்றால் புனிதத் தீயில் புத்தாக்கம் பெற்றவர்கள் எனப் பொருள்படும். தாங்கள் சுத்தமான ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என நம்புபவர்கள். மகாராஷ்டிரா மாநிலம் எப்பொழுதுமே இந்து அடிப்படைவாதக் கொள்கைக்கு ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது. இதற்கு வித்திட்டவர் பால கங்காதர திலகர். இந்தியாவில் மக்களிடம் மத உணர்வைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முடியும் என்பதற்கு முதன்முதலாக வழிக்கோலிட்டவர் திலகர். அந்தத் திலகரின் உரைகளைக் கேட்டும் எழுத்தினைப் படித்தும் உருவானவர் சர்வர்கர். கோட்சே, ஆப்டே, கர்கரே, பட்கே, மதன்லால் போன்ற இளைஞர்கள் சர்வர்கரினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். சர்வர்கருக்கு இந்தியாவை இந்து-இந்தியாவாக மாற்ற வேண்டும் என்பது கனவு. அப்படி உருவாக்கப்படும் இந்து ராஷ்டிராவிற்கு தான் தலைமை ஏற்க வேண்டும் என்பது அவரது ஆசை. அவரது கனவிற்கும் ஆசைக்கும் குறுக்கில் நிற்பது காங்கிரசும் காந்தியும்.

அதனால் காந்தி ஒழிக்கப் படவேண்டும் என்ற நச்சு விதையினை அவர் தொடர்ந்து இளைஞர்கள் மனதில் விதைத்து வந்தார். அதனைத் தவிர இன்னொரு காரணமும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி, பிற ஜாதியினரின் வளர்ச்சி இவைகள் எல்லாம் பார்ப்பனியத்திற்கு விடப்பட்ட சவாலாகக் கருதப்பட்டது. குறிப்பாக, வருணாசிரம தருமம் வீழ்த்தப்படுவதாகக் கருதினர். காந்தியின் பேச்சும் எழுத்தும் தொடக்கத்தில் வருணாசிரம தருமத்தை ஆதரித்து வந்தாலும், பின் அவரது போக்கு மாறத் தொடங்கியது. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் இந்து மதம் மாற்றம் பெற வேண்டும் என காந்தியார் விளம்பினார். கோயில் விபச்சாரம் செய்யும் இடமாக உள்ளது என காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொறுப்பார்களா சனாதனிகள்! காந்தியை ஒழிக்க முடிவு செய்துவிட்டனர். ஆகவே, காந்தியைக் கொல்ல இதுதான் காரணமேயன்றி வேறு ஒன்றுமில்லை.

தாய் தந்தை அற்றவர்கள், கல்வியில் தோல்வியுற்றவர்கள் , சிறு வயதில் பிரச்சினையான வாழ்க்கையைக் கொண்டவர்கள் இவர்கள் எல்லோருக்கும் சர்வர்கரின் பேச்சு அருமருந்தாய் இருந்தது.. பிடிப்பற்ற அவர்களுக்கு சர்வர்கர் உற்ற தோழனாய் , தனயனாய், தந்தையாய் விளங்கினார். துசார் காந்தியை மனம் நோகச் செய்தது காந்தியின் உயிரைப் பாதுகாப்பதில் போலீஸ் மற்றும் அரசு காட்டிய மெத்தனங்கள். 1948, ஜனவரி 20ஆம் தேதி பிர்லா மாளிகையில் கையெறி குண்டு மற்றும் துப்பாக்கி மூலமாக காந்தியை வீழ்த்த கொலையாளிகள் முயற்சிக்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்து மதன்லால் என்கிற கூட்டாளியைக் காவல் துறை கைது செய்கிறது. அவனது வாக்குமூலத்தில் எல்லா உண்மைகளும் வெளிவருகின்றன. அவன் கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே போன்றவர்களின் பெயர்களை போலீசிடம் சொல்லிவிடுகிறான். 24 மணி நேரத்தில் டெல்லி காவல் துறையினர் அவனிடமிருந்து பெரும்பான்மையான தகவல்களைப் பெற்றுவிடுகின்றனர்.

இந்தக் குற்றத்தை விசாரணை செய்யும் சிறப்பு அதிகாரி சஞ்சீவி, எப்படியாவது தப்பிச் சென்ற மற்றவர்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மதன்லாலின் வாக்குமூலத்துடன் இரு காவலர்களைப் பம்பாய்க்கு அனுப்புகிறார். ஆனால், பம்பாயில் இந்த காவல் துறை உயர் அதிகாரி நகர்வாலா டெல்லியிலிருந்து வந்த தகவல்களைப் புறம்தள்ளி காவலர்களை டெல்லிக்குத் திரும்பிச் செல்லும்படி விரட்டிவிடுகிறார். அதுமட்டுமின்றி, நகர்வாலா இன்னொரு தவறும் செய்கிறார். மதன்லால் கைது செய்யப்பட்ட செய்தியினை நாளிதழில் படிக்கும் டாக்டர் ஜெயின் என்பவர், மதன்லாலும் இன்னொரு கூட்டாளி கர்கரேயும் தன்னை ஜனவரி 14ஆம் தேதி தன் வீட்டில் சந்தித்து காந்தியைக் கொல்லப் போகிறோம் என்று கூறியதை நினைவுகூர்ந்து அச்செய்தியினை மாநில உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம் (பின்னாளில் இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பதவி வகித்தவர்) பகர்கிறார். செய்தியைக் கேட்டுப் பதற வேண்டிய மொரார்ஜி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிடுகிறார். பின் மொரார்ஜி, நகர்வாலாவைத் தன் வீட்டிற்கு அழைக்க, அவர், தான் தற்சமயம் வேறு ஒரு பணியில் இருப்பதாகக் கூறுகிறார். அதற்கு மொரார்ஜி, தான் மாலை ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இரயிலடியில் சந்திக்கும்படி விளிக்கிறார். இரயிலடியில் செய்தியைக் கேட்டறிந்த நகர்வாலா, முறையான _ ஒழுங்கான விசாரணையினைச் செய்யத் தவறிவிடுகிறார். இதில் கொடுமையென்னவெனில், கர்கரே என்பவன் ஏற்கெனவே போலீஸால் வேறு ஒரு குற்றத்திற்காகத் தேடப்பட்டு வருபவன்.

இதற்கிடையில் வெறும் கையுடன் டெல்லி திரும்பிய காவலர்கள் பம்பாயில் நடந்ததை சிறப்புக் காவல் அதிகரி சஞ்சீவிடம் தெரிவிக்கின்றனர். இந்த அதிகாரியும் பம்பாய் காவல் துறையின் போக்கினை மத்திய உள்துறை அமைச்சர் பட்டேலிடமோ வேறு முக்கிய அமைச்சர்களிடமோ சொல்லி அதைச் சரி செய்து கொள்ளாமல் ரானே என்கிற இன்னொரு அதிகாரியை மீண்டும் பம்பாய் அனுப்புகிறார். விமானத்தில் பறந்து செல்ல வேண்டிய ரானே ரயிலில் செல்ல முடிவெடுக்கிறார். (பின்னாளில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுது, விமானப் பயணம் தனக்கு அச்சம் அளிக்கக்கூடியது. எனவே, அதைத் தவிர்த்ததாகக் கூறுகிறார். நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டது.) அதுவும் டெல்லியிலிருந்து அலகாபாத் வழியாக ஏறத்தாழ 36 மணி நேரம் பயணித்து பம்பாய் நகரை அடைகிறார். இடையில் அலகாபாத்தில் மதச் சடங்கிற்காக இறங்கி நேரத்தை வீணடிக்கிறார். இவர் பம்பாய் போய்ச் சேரும்பொழுது கொலையாளிகள் பம்பாயை விட்டு வெளியேறி டெல்லி நகரை அடைகின்றனர்.

காவல்துறையினரின் அலட்சியப் போக்கு இங்ஙனம் என்றால் ஆட்சியாளரின் போக்கு இன்னும் வித்தியாசமானது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் இந்து அடிப்படைவாதியாகத்தான் இருந்தார். தான் பிரதம மந்திரியாக முடியாமல் போனதற்கு காந்தி முக்கியக் காரணம் என்று கருதினார். காந்தியின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் கூடுதலான எச்சரிக்கையோடு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர், 30 கோடி மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய துறையின் தலைவர், நாட்டின் தந்தை காந்திக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினார். காந்தி, தன்னைச் சந்திக்க வருபவர்களை பாதுகாப்பு என்கிற பெயரில் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என கண்டிப்பாகக் கூறியிருந்தார். என் பாதுகாப்பு இறைவனின் கைகளில். ஆகவே இறைவனுக்கு உகந்தாத காரியத்தை நான் செய்ய மாட்டேன் என்று தடுத்துவிட்டார். (இறைவனைப் பாதுகாக்கவே காவலர்களும், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளும் தேவை என்பதை காந்தியார் உணர மறந்ததுதான் வேடிக்கை). சரி, அப்படித்தான் காந்தியின் விருப்பப்படி இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சாதாரண உடை அணிந்த காவலர்களை பிர்லா இல்லத்தில் உலவவிட்டிருந்தால், கோட்சே, ஆப்டே மற்றும் கர்கரே ஆகியோரை எளிதாகப் பிடித்திருக்கலாமே? ஜனவரி 30 அன்று கொலை நடப்பதற்குச் சில மணி நேரங்கள் முன்கூட கோட்சே பிர்லா இல்லத்தில் வேவு பார்த்தானே, அதைக்கூடத் தடுக்க முடியவில்லையே. பட்டேலின் அலட்சியப் போக்கு காந்தியின் உயிரைப் பலி கொண்டு விட்டது.

இன்றைக்கு இந்துத்துவக் கூட்டம் பட்டேலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது. பிரிட்டிஷாரின் பிரிவினைக்கான திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் பட்டேல் முக்கியமானவர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு ரூபாய் 55 கோடி கொடுக்கும் தீர்மானத்தில் முதலில் கையெழுத்துப் போட்டவரும் பட்டேல்தான். அப்படியிருக்க, இந்துத்துவச் சக்திகள் பட்டேலை புனித உருவமாகச் சித்தரிக்க முயல்வதும், காந்தியின்மீது வீண் பழி சுமற்றுவதும் உள் நோக்கமுடையது. காந்தியின் செல்லப் பிள்ளையான நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில், கொஞ்சம் கொஞ்சமாக காந்தியின் கொள்கைகளிலிருந்தும் காந்தியிடம் இருந்தும் விலகிச் சென்று கொண்டிருந்தார். பஞ்சாப் மாநிலம் மேற்கு கிழக்காக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்ற முக்கியமான செய்தியினைக்கூட காந்தியிடம் விவாதிக்கத் தவறினார். நேருவிற்கும் ஏனைய காங்கிரஸாருக்கும் உயிரோடு இருக்கும் காந்தியைவிட காந்தி என்கிற பிம்பம்தான் வசதியாக இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை காந்தியை ஒரு சுமையாகத்தான் கருதினார்கள்.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூல் படிப்பதற்கு மிக எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. குறிப்பாக ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி காந்தி கொல்லப்படும் வரை, நாள்தோறும் நடந்த நிகழ்வுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளின் திட்டம், அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள், கொலையை நிறைவேற்றுதல் என்று அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருப்பது துசார் காந்தியின் சிறப்பு. இந்திய வரலாற்றுப் பக்கங்களை_ குறிப்பாக சுதந்திரம் பெற்ற காலம், நாட்டின் பிரிவினை, ஆட்சியாளரின் போக்கு, இந்துவெறியர்களின் ஆட்டம், காந்தியின் கொலை, வழக்கு, வாக்குமூலம், தண்டனை என பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள உதவும் அற்புதமான பொக்கிஷம்.